பாதுகாவல் (இரண்டாம் பதிப்பு)


அறிமுகம்:

பெயர்: சிவா
வயது: 28
தொழில் & பொழுதுபோக்கு: நூதன முறையில் திருட்டு/கொள்ளை
நீண்டகால சாதனை: அதிநுட்பத் திருடர்கள் பட்டியலில் ஐந்தாவது இடம்
சமீபத்திய சாதனை:

உலகப்புகழ் பெற்ற கின்வுட் மருத்துவமனையில் காணாமல் போன இருபத்தைந்து செயற்கை இதயங்கள்

சிவா:

இயந்திரங்களின் இயக்கங்கள் நிறைந்த அந்த அறையின் இடைவெளிகளில் நான் இலக்கை நோக்கி லாகவமாக புகுந்து புறப்பட்டேன். என்னை கூறுபோடத்துடிக்கும் வேகமான இயந்திர அசைவுகளுக்கு ஏற்ப என் உடல் வளைந்து கொடுத்து நகர்ந்தது வந்தேன். இதோ இலக்கு எனும் நிலையில் குனிந்த நான் நெஞ்சுக்கே நேரே வந்த கூரிய இரும்புகரத்தை கவனிக்க மிகவும் தாமதமாகிவிட்டது. அசைவதில் பயனில்லை என்பதால் உறைந்து போனேன். என் நெஞ்சினை நோக்கி அது நகர்வதை கண்கள் அதிவேகத்தில் படமெடுத்து அனுப்பிக்கொண்டிருந்தது மூளைக்கு.

அடுத்த நொடியில் என் நெஞ்சை ஊடுருவி விட்டிருக்கக் கூடும், அதற்குள் இனிமையான பெண் குரல் என்னை உசுப்பியது. சே! ஒவ்வோரு முறையும் இந்தக்கனவு இதே இடத்தில் ஏதோ ஒரு காரணத்தால் கலைந்துபோகிறது, இம்முறை ஷைல். என்னால் வடிவமைக்கப்பட்ட அந்த புத்திசாலி எந்திரத்தின் மேல் கோபம் கொள்வதில் அர்த்தம் இல்லை. என்னுடைய தினசரி காரியங்கள் சரிவர நடப்பதில் அதற்கு பெரும் பங்கு இருக்கிறது, அது என் காரியதரிசி மட்டுமல்ல இனிய இயந்திரத்தோழியும் கூட. கனவினால் ஏற்படும் உடலியல் மாற்றங்களை உணர்ந்து அமைதி காக்க சொல்லித்தந்தால் எல்லாம் சரியாகிவிடும்.

"மன்னிக்கவும், இன்று காலை 7:02 மணிக்கு புதிய தொழில் நுட்ப ஆயுதங்கள் பற்றிய மாநாட்டில் கலந்து கொள்ள, இப்போது எழுந்தால் தான் நீராவிக்குளியல் முடித்து கிளம்ப சரியாக இருக்கும், தவிர அதி முக்கியம் அதி ரகசியம் போன்ற குறியீடுகளோடு உங்களுடைய பிரத்யேக முகவரிக்கு ஒரு கடிதம் வந்துள்ளது" என்ற ஷைல் "படி", என்றதும் தொடர்ந்தது.

காலை வணக்கம்,

உயர் தொழில் நுட்ப திருடர்கள் பட்டியலிலிருந்து உங்களது தகவல் பெற்றேன். நீங்கள் மிகவும் விரும்பக்கூடிய சிக்கலான ஒரு வேலை என்னிடம் உள்ளது. ஏனோ, இதைச்செய்வதற்கு முற்றிலும் சரியான நபர் நீங்கள்தான் என்று எனக்குத் தோன்றியது. இது பற்றி, மேலும் விவரமாகப் பேச விருப்பம் இருந்தால் எங்கே, எப்போது சந்திப்பது என்று கீழ்க்கண்ட என் பிரத்யேக முகவரிக்குத் தகவல் அனுப்பவும்.

நம்பிக்கைக்குரிய
க.மரியா
[124357673-07696465896746568-73458563]

என் உடலில் சிலிர்ப்பு அலை பரப்பியது. மீண்டும் ஒரு சிக்கலான பணி என்னை நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஹ! யாரிந்த மரியா? தொலைபேசி முதல் அனைத்திலும் எழுத்துக்களையே பயன்படுத்தும் இந்த யுகத்தில் வெறும் எண்களால் முகவரி தரும் இந்தப் பெண் வித்யாசமானவள்தான், அவளை உடனே பார்க்கவேண்டும். இந்தத் தொழில் நுட்ப மாநாடு ஒன்றும் பிரமாதம் இல்லை, ஐந்து வருடத்திற்கு முன் நான் பயன்படுத்திய கருவிகளையும், நுட்பங்களையும் பற்றி இப்போதுதான் விவாதிப்பார்கள்.

ஷைலிடம் முதலில் நான் மாநாட்டில் பங்குபெறுவதை ரத்து செய்துவிட்டு, மரியாவை 7.35 க்கு நீலாலம் (Blue Poison) உணவகத்தில் சந்திப்பதாக மரியாவிற்கு தகவல் அனுப்புமாறு கூறினேன்.

அவசரக் குளியல் முடித்து, வழக்கம்போல் பத்து நிமிடம் முன்னதாகவே விடுதியை அடைந்தேன். பின்புற வாசலுக்கு அருகிலுள்ள ஒரு மேசையைத் தேர்ந்தெடுத்து, நான் கொண்டுவந்த பொருட்களை வைத்தேன். உடன் பின்புற வாயில் வழியாக வெளியேறி முன்புற வாயில் நன்கு தெரியும்படியான மறைவிடத்தைத் தேர்ந்தெடுத்து கொண்டு வந்திருந்த நுண்ணிய கேமிராவை பொருத்தினேன். இந்த எச்சரிக்கை நடவடிக்கை என் தொழிலுக்கு மிக மிக முக்கியமானது. சரியாக 7.30க்கு புத்தம் புதிய சமீபத்திய வகை தானியங்கி வாகனம் வாசலில் நின்றது. அதன் கதவுகள் மேலாக திறக்க அதிலிருந்து அவள் இறங்கினாள்.

அவள் மரியாதான், என் உள்ளுணர்வு சொல்லியது. அவளைப் பார்த்தால் ஆடை அலங்காரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவளாகத் தெரியவில்லை, ஆனாலும் அழகாக இருந்தாள். நீல நிற வைரக்கல் அவளின் வெளிர் நீலக் கூந்தலுக்கு எடுப்பாக மின்னியது. அவள் கண்களின் துறுதுறுப்பு என்னை ஏதோ செய்தது. அவள் உள்ளே நுழையும் முன் விரைந்து என் இருக்கையை அடைந்தேன். அவளுடன் யாரும் வரவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டேன். என்னைக் கண்டுபிடிக்க அவள் அதிகம் சிரமப்படவில்லை.

உள்ளே நுழைந்ததும் சுற்றி ஒரு முறை பார்வை வீசியவள் நேராக என் அருகே வந்தாள். நெருங்கியதும் "ஷிவா?", என்று உதடுகளை சப்தமின்றி அசைத்தாள். நான் வாய்திறக்கும் முன்பே என் கையை அழுத்தி முகத்தை சலனமில்லாமல் வைத்துக்கொண்டு கண்களால் 'வெளியே சென்று பேசிக்கொள்ளலாம்', என்றபடி வாகனத்தை நோக்கி நடக்க, நான் பின் தொடர்ந்தேன். அவளுடைய எச்சரிக்கை நடவடிக்கைகள் அவள் கற்றுக்குட்டி அல்ல என்பதை உணர்த்தி ஆச்சரியப்படுத்தியது. வழக்கமாக வாடிக்கையாளர்கள் இவ்வளவு ஜாக்கிரதையாக இருப்பதில்லை.

அவளின் அழைப்பை ஏற்று எங்கள் முன் வந்த தானியங்கி வாகனம், தன் கதவுகளைத் திறந்து வரவேற்றது. அவளும் என்னுடனே பின்னிருக்கையில் அமர, அது சீரான வேகத்தில் நகரத் துவங்கியது. சப்தம் வெளியேறாதபடி ஃபைபர் கதவுகள் மூடிக்கொள்ள, புன்னகைத்தபடியே இனிக்கும் குரலில் "இதை அணிந்துகொள்ளுங்கள்", என்று நவீன வகை ஸ்கிராம்பிளரை (Scrambler - ஒலியை குழப்பி அனுப்பி மறுமுனையில் தெளிவித்து இடையில் வேறு யாரும் ஒட்டுக்கேட்க முடியாதபடி செய்யும் அமைப்பு) கொடுத்தாள். அதை என் முகத்தில் பொருத்திக்கொண்டதும் தானும் ஒன்றை பொருத்திக்கொண்டு தொடங்கினாள்.

"உங்களை நேரில் பார்த்தபின் உங்கள் மீது நான் வைத்திருந்த நம்பிக்கை சரியானதுதான் என்று தோன்றுகிறது, இனி நான் கூறப்போகும் விஷயங்கள் ரகசியமானவை, இப்பணியில் உங்களுக்கு ஆர்வமில்லையெனில் சுத்தமாக மறந்துவிடவேண்டியவை"

"இது வாடிக்கையாளர்களின் வழக்கமான நிபந்தனை, மேலே சொல்", என்றேன். விளக்கமாக சொன்னாள்

"ரோபோடெக்(Robotech) என்னும் நிறுவனம் பல்வேறு பணிகளை செய்யக் கூடிய இயந்திரங்களை உருவாக்கி வருகிறது, அதன் சமீபத்திய கண்டுபிடிப்பு முயற்சி லூரா 1758. தற்போது திட்ட அளவில் உள்ள இந்த இயந்திர மனிதன் மட்டும் உருவாகிவிட்டால் மனிதன் அதை ஜெயிப்பது சாத்தியமில்லை. நிறுவனத்தின் கோப்பு அறையில் அதன் மூளையான பிராஸசரும்(Processor) திட்ட வரைபடமும் பாதுகாக்கப் படுகிறது. நிறுவனத்தின் தரைப்படத்தையும், முக்கிய வாசல் வழியாக உள்நுழைவதற்கான அனுமதிஅட்டையும் என்னுடைய சக்தியைப் பயன்படுத்தி பெற்றுத்தர முடியும். அதைப்பயன்படுத்திக்கொண்டு எனக்கு பிராஸசரையும் திட்டப் படத்தையும் எடுத்துத் தரவேண்டும். விலையாக முன்பணமாக இரண்டு கோடியும், வேலை முடித்தபின் மிச்சம் நாற்பத்தெட்டு கோடியும் தரமுடியும்"

பேசும்போது அவள் கண்கள் என்னுள் ஊடுருவுவதை என்னால் உணர முடிந்தது.

"இந்தப் பணிக்கு நீங்கள் குறிப்பிடும் தொகை மிகவும் குறைவு. இருப்பினும் இது ஒரு விறுவிறுப்பான வேலை என்பதற்காக ஒப்புக் கொள்கிறேன்."

நான் பேசப்பேச அவள் முகம் மலர்ந்தது. அவளுடைய புன்னகையில் இப்போதே வெற்றி பெற்றுவிட்டது போன்ற பெருமிதமும் முழு நம்பிக்கையும் நன்கு வெளிப்பட்டது. இந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்ற வைராக்கியம் என்னுள் எழுந்தது. சிரித்தபோது அவளுடைய கன்னங்களில் விழும் குழியை ரசித்தவாறே விடைபெற்றுக்கொண்டேன்.

* * *

வீடு திரும்பியவுடன் ஷைலிடம் எனக்கான வேலையையும், அதற்கான விலையையும் தெரிவித்தேன். இந்த வேலையில் அதிக லாபமில்லை என்ற ஷைல், நான் முன்பு செய்த வேலையையும் அதற்கான விலையையும் சான்றாகக் காட்டியது.

"இது எனக்கு முன்பே தெரியும் ஷைல். ஆனால், இந்த வேலையில் என் மூளைக்கு நல்ல தீனி கிடைக்கும் என்று தோன்றியது. இம்முறை நான் மோதப்போவது அதி நவீன ரோபாட்கள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்துடன். அதனால்தான் ஒப்புக்கொண்டேன்."

என்னுடய தொழில் நுட்ப மோகம் பற்றி நன்கு தெரிந்திருந்ததால், ஷைல் இது பற்றி மேலும் விவாதிக்கவில்லை. என்னுள் மரியாவால் ஏற்பட்டுள்ள வேதியல் மாற்றங்களை புள்ளிவிபரங்களாக கவனமாகக் குறித்துக்கொண்டது. அதன் கிண்டலான பார்வையை நான் தவிர்த்துவிட்டேன், நிமிர்ந்து பார்த்தால் கேள்வி வரும். மனிதர்களின் காதல் மற்றும் காமம் அதற்கு உணர்வுகளாகப் புரிவதில்லை. ஹூம்! ஓய்வு கிடைக்கும்போது ஷைலுக்கு நான் இன்னும் நிறைய கற்றுத்தர வேண்டும்.

அந்தத் தரைப்படமும், உள்ளே நுழைவதற்கான அடையாளக் அட்டையும் மரியாவிடமிருந்து நாளைதான் கிடைக்கும். அதற்கு முன்பே நான் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. உலகின் அனைத்து தொழில் நுட்ப வளர்ச்சிகள், புதிய கண்டுபிடிப்புகள் பற்றிய எல்லா விவரங்களையும் பாதுகாப்புக் கருதி, ஒவ்வொரு நாடும் தன் இராணுவத்திற்கான பிரத்யேக இணைய அமைப்பில் சேமித்து வைப்பது வழக்கம். அனைவருக்கும் அனுமதி மறுக்கப்படும் இந்தப் பிணைப்பினுள் ஏமாற்றி நுழையும் வித்தை எனக்கு(ம்) தெரியும். திருடுவது போன நுற்றாண்டு போல அவ்வளவு சுலபமல்ல.

உலகெங்கும் ஏற்பட்டு வரும் தொழில் நுட்ப மாற்றங்கள், திருட்டுக்கு தொழில் நுட்ப அறிவை கட்டாயமாக்கி விட்டன. உலகின் தலை சிறந்த விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பாளருக்கு நிகரான அறிவு இங்கு தேவைப்படுகிறது. அது மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் நாட்டில் நிகழும் மாற்றங்கள் பாதுகாப்புத் துறையில் எங்களைப் பிடிப்பதற்காகப் போடப்படும் புதிய திட்டங்கள், அதற்கான கருவிகள் போன்ற தகவல்களை உடனடியாகத் தெரிந்துகொண்டு தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து உடனுக்குடன் செயல்படுத்த வேண்டும்.

நாங்கள் அவர்களுடைய இணைய அமைப்பினுள் ஊடுருவி தகவல்களைப் பெறுவது போல, அவர்களும் எங்களுடைய பிரத்யேக அமைப்பினுள் ஊடுருவி எங்களைப் பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதில் அவர்களுக்கு சமயத்தில் வெற்றியும் கிடைத்து விடுகிறது. என்னுடய பிரத்யேக இணைப்பு மிகவும் விசேஷமான தன்னைத் தானே உருமாற்றிக் கொள்ளும் இயல்புள்ளது. அதற்கென பல நுட்பங்கள் வைத்துள்ளேன். என்னை பிடிப்பது அவ்வளவு சுலபமில்லை.

அட! ராணுவ இணைப்பு கிடைத்துவிட்டது. இன்றைய தகவல்களை உருவிக் கொள்ள வேண்டியதுதான். இடைப்பட்ட நேரத்தில் ஷைல், அறையில் கலைந்து கிடந்த பொருட்களை ஒழுங்கு செய்வதில் ஈடுபட்டிருந்தது. இன்றைக்கு கிடைத்த தகவல்களில் அவ்வளவு சுவாரஸ்யம் இல்லை என்றாலும் சில தகவல்கள் கவனிக்கத்தக்கவை. அடுத்து ஒரு முக்கியமான வேலை இருக்கிறது. ரோபோடெக் நிறுவனத்தை நோட்டமிடும் வேலை.

தேவையான சில கருவிகளை என் பெட்டியில் எடுத்துக் கொண்டு கிளம்பினேன். அந்த நிறுவனம் இருக்கும் இடம் பற்றி வரைபடத்தில் பார்த்ததை மீண்டும் நினைவு கூர்ந்தேன். அந்த நிறுவனத்திற்கு அருகிலிருந்து சிறிய குன்று நான் உளவு பார்க்க தோதாக இருக்கும் என்று தோன்றியது. நவீனத்துக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத நாடோ டியின் உருவில் சரியாக 5:15 க்கு குன்றின் உச்சியை அடைந்தேன். ரோபோடெக் நிறுவனம் பிரம்மாண்டமாக, பளபளப்புடன், பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அந்த அலுவலகத்தின் அழகும் அமைப்பும், என்னை மிகவும் ஈர்த்தது.

பாதுகாப்பு பணிகளை செய்யும் திறமைமிக்க இயந்திரங்களை உருவாக்கும் நிறுவனம் எவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளை கொண்டிருக்கும்! அந்த ஏற்பாடுகளில் குறைந்தபட்சம் ஒரு ஓட்டையை நான் கண்டுபிடிக்க வேண்டும். என் கண்கள் பரபரத்து தேடிக்கொண்டிருப்பது அதற்குத்தான். நான் அணிந்திருந்த கண்ணாடியில் பதுக்கப்பட்டிருந்த டிஜிடல் (digital) சமாச்சாரங்கள் கண்ணில்பட்டதை முப்பரிமாண(3D) படங்களாகவும் வெப்ப மாறுதல் (infra red) படங்களாகவும் பதிவுசெய்துகொண்டிருந்தன, இவ்விடத்தின் சூழலை நிதானமாக அலசிப்பார்க்க அவை உதவும். அதிகப்படியாக தூக்கி நிறுத்தப்பட்டிருந்த என்னுடைய செயற்கை சிகையினுள்ளிருந்த மின்னணு கருவிகளும் தங்களின் பணியைத் துவக்கிவிட்டன.

முகப்பில் காவல் பலமாக இருந்தது. பாதுகாப்பு இயந்திரங்கள் குவிக்கப்பட்டிருந்தன, அந்த இயந்திரங்களில் பொருத்தப்பட்டுள்ள சென்சர்கள் (senser) உள்ளே நுழைய காத்திருக்கும் உருவம் மனிதன் தானா, அவனுடலில் ஏதேனும் உலோக/டிஜிடல் கருவிகள் புதைக்கப்பட்டிருக்கிறதா, உடலின் ஒவ்வொரு செல்லிலும்(cell) உயிர் இருக்கிறதா? (இல்லை எனில் இறந்தது எப்போது) உள்ளே நுழைய அனுமதி பெற்றவர்களின் விழி, விரல் ரேகைகளுடன் பொருந்துகிறதா? உட்பட பல சோதனைகளை மேற்கொண்ட பிறகே உட்செல்ல அனுமதித்தன.

வான் வழியே தரையிறங்க மேல்தளத்தில் வசதி இருந்தது. ஆயினும் அவ்வாறு வந்தவர்களும் முகப்பு வழியேதான் உள்நுழைய வேண்டியிருந்தது. மேல் தளத்தின் மையத்தில் கண்காணிப்புக் கூடம் இருந்தது. அங்கிருந்தபடி மாளிகையின் வெளிப்பகுதியை எல்லா திசைகளிலும் காணமுடிந்தது. சில இயந்திரக் கண்கள் அங்கிருந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தன. மையத்திலிருந்து சுழலும் முறையில் அமைக்கப்பட்டிருப்பதால் இந்த கண்களால் வெளிச்சுவரிலிருந்து பத்தடி நீளத்துக்குமேல் பார்க்கமுடியாது. இந்த தூரத்தைப் பார்வையிட தனிப்பட்ட காமிராக்கள்(camera) சுவரிலேயே பதிக்கப்பட்டிருந்தன. சுவர்கள் அனைத்திலும் எஃகு வேயப்பட்டிருந்தத்து, அது தவிர கதிரியக்கத்தைத் தவிர்க்க சில விசேஷப் பூச்சுக்களும் சில உலோக அடுக்குகளும் இருந்தன.

மேலும் பல விஷயங்களை கவனித்தபின், அந்த அலுவலகத்தை ஒட்டிய சாலையை என் வாகனத்தால் ஒரு சுற்று சுற்றிவிட்டு வீடு திரும்பினேன். மேலும் ஒன்றிரண்டு முறை வர வேண்டியதிருக்கலாம்.

* * *

பொதுவாக வாடிக்கையாளர்களிடம் அவர்களின் நோக்கம், பின்னணி ஆகியவை பற்றிய கேள்விகளை தவிர்த்து விடுவோம். அவர்களாக சொன்னால் தான் உண்டு. இதில் அவர்களுக்கு கிடைக்கும் லாபம் எனக்கு அவர்கள் அளிக்கும் பங்கைவிட பலமடங்கு அதிகம் என்பதால் முழு விபரங்களை ஒருபோதும் தரமாட்டார்கள். நான் ஒரு பணியை ஒப்புக்கொள்வது என்பது என் செயலுக்குரிய பங்கு கிடைத்தால் மட்டுமே. அந்த தொகைக்கு மேல் குறுக்குவழியில் சம்பாதிக்கும் எண்ணம் துளியுமில்லை.

செய்யும் தொழில் திருட்டானாலும் அதிலும் நாணயம் வேண்டும் என்று நினைப்பவன் நான். வாழ்க்கையில் ஒரு சிலரிடமாவது உண்மையாக இருக்கவேண்டும், எல்லாரிடமும் நடிப்பும் நயவஞ்சகமுமாக இருந்தால் மனதில் நிம்மதி என்பதே இருக்காது!

வாடிக்கையாளர்கள் தங்களைப்பற்றி சொல்லாவிடினும் தற்காப்புக்காக அவர்களைப்பற்றி அறிந்து கொள்ளவேண்டிய அவசியம் எனக்கு உண்டு. வழக்கம் போல ஷைல் விபரங்களைத் தேடிக் குறிப்பு எடுத்து வைத்திருந்தது.

கிடைத்த தகவல்கள்:

  1. மரியா எனும் பெயரில் நீங்கள் பார்த்த அதே உருவத்துடன் ஒருத்தி ரோபோ டெக் நிறுவனத்தில் பணிபுரிகிறாள்.
  2. அவளை அதிக சம்பளம் கொடுத்து தம் பக்கம் ஈர்க்க ஆக்டிவ் இண்டெலிசென்ஸ் (Active IntelliSense)நிறுவனம் முயன்று வருகிறது

மேற்கண்ட தகவல்களின் அடிப்படையிலான கணிப்பு:

  1. மரியா மாற்றுபெயர் தந்து ஏமாற்றவில்லை.
  2. விரைவில் வேலை மாற்றம் நடைபெறலாம்.
  3. புதிதாய் சேரவிரும்பும் நிறுவனத்திற்கு சில தொழில்நுட்ப ரகசியங்களை கடத்த முயற்சி. பழி தன்மேல் விழாமலிருக்க மூன்றாம் நபர் பிரயோகம்.

ஷைலுக்கு இந்தமுறை அதிக விவரங்கள் கிடைக்கவில்லை. இவ்வகை நிறுவனங்களின் தகவல் களஞ்சியத்திலிருந்து இந்த அளவு உருவியதே சாதனைதான்.

அடுத்த இரண்டு நாட்கள் வேவு பார்த்தல் மற்றும் திட்டமிடலிலேயே கழிந்தது. இடையில் மரியாவிடமிருந்து தரைப்படமும் உள்ளே நுழைவதற்கான அடையாள அட்டையும் வந்து சேர்ந்தது. ரோபாட்களின் உயவுப்பொருள் (lubricant) மாற்றி சுத்தம் செய்யும் பணியாளாய் என்னை கணக்கு எடுத்துக்கொண்டு உட்புக அனுமதிக்கும். இவ்வகை தில்லுமுல்லுகளை நிறுவனத்தில் உள்ளிருந்து மட்டுமே செய்ய இயலும்.

ஒரு வழியாக திட்டம் தயாராகிவிட்டது. பூமியை சுற்றி ஒரு காலத்தில் ஓஸோன் (ozone) என்று ஒரு அடுக்கு இருந்ததாம், அதன் பாதுகாப்பு இல்லாமல் போனபின் புற ஊதாக்கதிர்களின் பாதிப்புகளாலும், ஏற்பட்டுவரும் விண் துகள்(cosmic dust) பொழிவாலும், மனிதர்களின் வன்முறை செயல்களுக்கு வரையே இல்லாமல் போய் அணு, வேதியல் மற்றும் உயிர்ம (atomic, chemical and bio-chemical) குண்டுகள் அடிக்கடி வீசப்பட்டதாலும் பூமியே மாசடைந்து போயிருக்கிறது. வெட்ட வெளியில் முகக் கவசமின்றி சுவாசிக்க இயலாது. ஒவ்வொரு கட்டிடதிலும் அந்தக்கால குளிரூட்டும்பெட்டி(A.C.) போல காற்றைச் சுத்தீகரிக்கும் அமைப்பு (Centralized Air Purification System) இணைக்கப்பட்டுள்ளது. உள்ளே இருக்கும் மொத்த காற்றும் இதன் வழியாக மட்டுமே வந்தாக வேண்டும். இதைத்தான் பயன்படுத்திக் கொள்ளப் போகிறேன்.

* * *

ரோபோடெக்கின் முக்கிய நபர்கள் யாரும் மாலை 8:30 மணிக்குமேல் இருப்பதில்லை. இரவு ஒன்பது மணிக்கு என் திட்டத்தை செயல்படுத்த எனது கருவிகளை எடுத்துக்கொண்டு கிளம்பி குன்றை அடைந்தேன்.

எனக்கு எதிர்ப்பு மனிதர்கள், இயந்திரங்கள் என இரண்டு விதமாக வரலாம். முதலில் மனிதர்களை கவனிப்போம்.

குழந்தைகளுக்கான பிரபல விளையாட்டு விமான வடிவினுள் வழக்கமான பாராசூட்டுடன் குதிக்கும் வீரன் பொம்மையும், பதுக்கப்பட்ட எனது கருவிகளும். இந்தவகை விமானங்கள் வழக்கமாக சிறுவர்களால் ரிமோட் கண்ட்ரோல் (remote control) மூலம் இயக்கப்படும். ஆனால் என்னுடைய சிறப்பு விமானத்தின் பயணம் திட்டம் ஏற்கனவே அதனுள் எழுதப்பட்டுள்ளதால், திட்டமிட்ட இலக்கை நோக்கி அது துல்லியமாக விரைந்தது. கண்காணிப்பு கூடத்துக்குமேல் பிள்ளை விளையாட்டு போல மூன்று முறை கரணம் அடித்து தவறி விழுவது போல பாராசூட் பொம்மையை எறிந்தது.

இவ்வகை விமானங்கள் இப்படி பறப்பது வழக்கம் என்பதால் கண்காணிப்புக் கூட இயந்திரங்கள் கண்டுகொள்ளவில்லை. பாராசூட்டில் என்னால் போடப்பட்டிருந்த பொத்தலால், பொம்மை மதில் சுவருக்கு அருகே விரைவில் தரை தொட்டது.

கட்டிடத்தின் வெளிச்சுவரில் பொருத்தப்பட்டிருத்த காமிராக்கள் அசைவு, புகை, நெருப்பு போன்றவற்றை உணர்ந்து அந்த திசையில் உடனே திரும்பி படம் பிடிக்கும் வண்ணம் அமைத்திருந்ததால் அந்தப்பக்கம் இருந்த இரண்டு காமிராவும் பொம்மையின் பக்கம் திரும்பின. அவை பொம்மையை அலசிக்கொண்டிருந்த அதே நேரத்தில் கட்டுப்பாடு இழந்ததைப்பொல் விமானம் உட்சுவருக்கு வெகு அருகே விழுந்து நொறுங்க, அதனுள்ளிருந்து வெளிப்பட்ட இயந்திர அமைப்பு பூகம்பத்தால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அஸ்திவாரத்தில் கொடுக்கப்பட்டிருந்த இடைவெளியில் சட்டென புகுந்துகொண்டது.

அந்த இடத்தில்தான் காற்றை சுத்தீகரிக்கும் அமைப்பின் முக்கிய குழாய், கட்டிடம் மொத்ததிற்குமான சுத்தமான காற்றை எடுத்துச்செல்கிறது. என்னுடைய இயந்திர அமைப்பு அக்குழாயின்மேல் வசதியாக அமர்ந்துகொண்டு சப்தமின்றி துளையிட்டு தான் திட நிலையில் கொண்டுவந்திருந்த நிறம், மணம் அற்ற மயக்க வாயுவை உட்செலுத்தியது. இன்னும் இருபது நிமிடங்களில் கட்டிடத்திலுள்ள அனைவரும் மயக்கத்தில் ஆழ்ந்து விடுவர். முழுவதும் வாயு உட்செலுத்தப்பட்டவுடன் வெற்றித் தகவலை எனக்கு அனுப்பிவிட்டு இயந்திரம் தன்னைத்தானே எரித்து அழித்துகொண்டது.

மனித எதிரிகளை ஒரு மணி நேரம் செயலிழக்க செய்தாயிற்று, இனி சமாளிக்க வேண்டியது இயந்திரங்களை. கோப்பு அறையின் வாயில்வரை செல்ல மரியாவின் அனுமதி அட்டை உபயத்தில் ஒரு தடையுமில்லை, என் ஆடையில் முதுகுப்புறம் ஒளிந்திருந்த கருவி சக்திவாய்ந்த் மின்காந்த அலையை வீசி இயந்திரங்களின் நினைவறைகளில் பொதிக்கப்பட்ட அத்தனை டிஜிடல் (பூஜ்ஜியம் மற்றும் ஒன்று) எண்களையும் நீக்கி ஒன்று எனும் எண்ணை பொதித்துவிடும். இந்த திடீர் மாற்றத்தால் சிந்தனையை தொடரமுடியாமல் ஸ்தம்பித்து நிற்கும் இயந்திரங்கள் சுதாரித்து மீள்வதற்குள் என் வேலை முடிந்துவிடும்.

அறைக்குள் நுழைய நான் அதிகம் சிரமப்படவில்லை. உள்ளே யாரும் தென்படவில்லை. எதிரிலிருந்த லாக்கரில்தான் எனக்கு வேண்டிய கோப்பு (file) உள்ளது. அதன் அமைப்பு சற்று வினோதமாக இருந்தது. பல அடுக்குகளாய் பூட்டப்பட்டிருந்தது. ஒவ்வொன்றாக வரிசைப்படி விடுவிக்க வேண்டும் வரிசை மாறினால் கட்டுப்பாட்டு கூடத்திற்கு எச்சரிக்கை தகவல் அனுப்பிவிடும். தீவிர யோசனையிலிருந்த எனக்கு பின்னால் ஏதோ அசைவது போல் உள்ளுணர்வு ஏற்பட சடாரென திரும்பி பார்த்தேன் ஏதும் இல்லை.

சமாதானமடைந்தவன் போல் திரும்பிக்கொண்டு எனது கண்ணாடியிருந்த விஷேச அமைப்பின் உதவியால் பின்புறம் பார்த்த போதுதான் தென்பட்டது அது! ஆயிரம் வோல்ட் அதிர்ச்சி என் மனதில். இங்கே ஒரு இயந்திரம் ஒளிந்திருக்கிறது எனும் தகவலை விட அதன் கரங்களின் கூரிய அமைப்பு என் கனவில் கண்டதை ஒத்தாக இருந்ததே அதிக அதிர்ச்சி தந்தது. ரோபோக்களின் ஸ்டெப்பர் மோட்டாரில் (stepper motor) ஏற்படும் மெல்லிய விர்ர்.. சப்தம் கூட அதனிடமில்லை. என்னைப்போல கிட்டத்தட்ட இரண்டரை மடங்கு பெரியது.

குறைந்த அசைவுகளில் என்னுடய மின்காந்த அலைவீசியை இயக்கி மொத்த அலைவீச்சையும் அந்த இயந்திரத்தின் இருப்பிடம் நோக்கி நகர்த்த, உறைந்தது போல நின்றுவிட்டது. நிம்மதி அடைந்தவன் போல வேலையைத் தொடர்ந்தாலும், அதனைக் கண்காணிப்பதை நிறுத்தவில்லை. பலன் அடுத்த ஐந்து நிமிடத்தில் கிடைத்தது, வெளிப்பார்வைக்கு அசையாததாக தோன்றினாலும் உள்ளே சிறு அசைவுகள் இருப்பதை என் கருவிகள் உணர்த்தின. இத்தகவல்கள் மூலம், இது அரிய வகை இயந்திர அமைப்பு என்பதும், அதன் நினைவகம் வெளியே வேறெங்கோ பொதிக்கப்பட்டுள்ளது என்பதும் தெளிவானது. மற்ற இயந்திரங்கள் போல நேரடியாக தாக்காமலிருப்பதினாலும், என் அசைவுகளைக் கூர்ந்து நோக்குவதாலும் இது செயற்கை அறிவு (artificial intelligence) ஊட்டப்பட்டு சிந்திக்கிறது என்பதும் பார்க்கும் செயல்களிலிருந்து கற்றுக்கொள்கிறது என்பதையும் புரிந்து கொண்டேன். மிகுந்த எச்சரிக்கையோடு நான் செயல்படவேண்டிய தருணம் இது.

அதன் அசைவுகள் எனக்கு தெரிந்துவிட்டதை என் மனதை படித்தது போல உணர்ந்துகொண்ட அது இப்பொது சுதந்திரமாக இயங்கத்தொடங்கியது. அதன்பிறகு சுமார் இருபது நிமிட நேரம் நீடித்த யுத்தம் பற்றி என்னால் வார்த்தைகளால் விவரிக்க இயலாது. வெகுநாளாக எனக்கு கிடைக்காமலிருந்த சம பலமுள்ள எதிரி. சதுரங்கத்தில் காய் நகர்ந்துவது போல் திட்டமிட்ட நகர்வுகள். எங்கள் இருவரின் முயற்சியும் எதிராளியை அழிப்பது இல்லை பிடிப்பது, கட்டுப்பாட்டிற்கு கொண்டுவருவது. ஆம் அதன் அறிவும் திறனும் என்னை கவர்ந்திருந்தன. என்னால் வீசப்பட்ட உலோக வலைகளையும் லேசர் வீச்சுக்களையும் திறம்பட சமாளித்தது. அதன் அசைவுகள் சில நேரங்களில் தன் மீது ஏறிவிளையாடும் சிறுவனை ரசிக்கும் தந்தையின் அசைவை ஒத்ததாக இருந்தது.

இருபதாவது நிமிடம் சடாரென தன் அசைவுகளை நிறுத்திவிட்டது. என்னை எதிர்த்து எந்த முயற்சியும் செய்யாமல் வெறுமே நின்றது. நான் அதனை உற்று நோக்கியபடி இருக்க கம்பீரமும் ஆண்மையும் நிரம்பிய குரலில் பேசத்தொடங்கியது.

"நண்பரே, அற்புதமான ஒரு ரோபோடிக்ஸ் (robotics) வல்லுனரின் திறனை நான் உம்மிடம் பார்க்கிறேன். என்னுடய அசைவுகள் உங்களுக்கு நன்கு புரிகிறது. உங்களின் எதிர்ப்பில் என்னை அழிக்கும் நோக்கம் துளியுமில்லை. மாறாக என்னை பார்க்கும் பார்வையில் ஒரு பரவசம் தெரிகிறது. என்னுடைய வெற்றி உங்களை சந்தோஷப்படுத்துகிறது. ஏன் என சொல்லுங்களேன்."

"நீண்ட நாட்களுக்குப்பின் சமமான எதிரியுடன் மோதுகிறேன் என்பதே எனது பரவசத்திற்கு காரணம். உனது வெற்றியை நான் தொழில்நுட்பத்தின் வெற்றியாகப் பார்க்கிறேன்."

"மிகவும் குறுகிய வட்டதினுள் நீங்கள் உழல்வதாக எனக்கு படுகிறது. இதைவிட நல்ல நிலைக்கு உங்களால் உயர்ந்திருக்க முடியும்."

"உண்மைதான்! வாய்ப்புகள் மறுக்கப்படும்போது வாழ்க்கை தடம் மாறுகிறது."

"சக்திவாய்ந்த மின்காந்த அலைகளை பயன்படுத்தினீர். அதன் பலனைக் கண்டறிந்து அக்கருவியை வடிவமைத்தது நீர்தானே?"

"ஆம், மிகவும் தற்செயலாக அக்கண்டுபிடிப்பு நிகழ்ந்தது"

"வன்முறையில் விருப்பமற்றவர் போல் தென்படுகிறீர்கள்!"

"ஆம், எனது கொள்ளையில் எப்போதும் உயிர்சேதம் இருக்காது"

இப்படி கை தேர்ந்த ஒரு மனோதத்துவ நிபுணன் போல ஹிப்னாடிச கேள்விகளை அடுக்கிக்கொண்டிருந்தது. எனது பதிலில் இருந்து அதன் சிந்திக்கும் ஆற்றலை பெருக்கிக்கொள்வதையும், நேரம் கடப்பதையும் மனம் உணர்ந்தாலும், பேச்சிலுள்ள சுவாரசியம் என்னைக் கட்டிப்போட்டது. இப்படியே பேச்சு வெகுநேரம் தொடர்ந்திருக்கும், நான் மட்டும் அந்த கேள்வியை கேட்டிருக்காவிட்டால்...

"உன்னுடைய வடிவமைப்பு எண் என்ன?" எனும் என் கேள்விக்கு தயக்கமின்றி அது சொன்ன பதில் எனக்கு சோதனைச்சாலை எலிகளை ஞாபகப்படுத்த மயக்கவாயு தேவைப்படாமலே மயக்கம் வந்தது.

அந்த பதில் "லூரா 1758"

(முற்றும்)

விட்டுப்போன ஒரு அறிமுகம்

பெயர்: மரியா
வயது: 26
தொழில் & பொழுதுபோக்கு: ரோபாடிக்ஸ், செயற்கை அறிவு குறித்த ஆராய்ச்சி
நீண்டகால சாதனை: திறமை மிகுந்த ரோபோ வடிவமைப்பாளர்கள் பட்டியலில் அதே ஐந்தாவது இடம். (இணையத்தில் வெளியிடப்படாத பட்டியல்)
சமீபத்திய சாதனை:

லூரா 1758

[ முதல்பதிப்பு மரத்தடி குளிர்காலப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது ]


கருத்துகள்

அதிகம் பார்க்கப்பட்ட பதிவுகள்

கைப்பேசிக்கான முதல் தமிழ் மின்நூல் வெளியீட்டு விழா!

உங்களோட செல்பேசியை இரண்டுல ஒண்ணு பாத்துடுவோமா?

பிரசவத்தில் கணவனின் பங்கு