கற்பு (முதல் பதிப்பு)

 அவன்

எரியும் சிதையிருந்து எழுந்த பிணத்தைப் போல சடாரென எழுந்தமர்ந்த என்னைப் பார்த்து சற்று அதிர்ந்துதான் போனான் மித்ரா.


"போர் முடிந்து ஏழு நாளாகிறது, நகரம் இப்போது நம் கைவசம், இன்னும் இத்தனை எச்சரிக்கை உணர்ச்சி ஏன்? ஒழுங்காக உறங்கவேண்டியதுதானே, உன்னை எழுப்ப வந்து நானே ஆடிப்போனேன், இவ்வளவு வேகம்தான் எதற்கு?"


"முழுமையான உறக்கம் என்னை கைவிட்டு வெகுகாலம் ஆகிறது, உள்ளத்தின் ஒரு பகுதி எப்போதும் விழித்திருக்கிறது எனக்கு"


கண்ட கனவின் வெம்மையும் குடித்திருந்த ரம்மின் போதையும் இன்னும் உடலில் மிச்சமிருந்தது, நெகிழ்ந்திருந்த உடையில் புடைப்பை அவன் உணரும் முன் ஆடையை இழுத்து விட்டுக் கொண்டேன். உடலை முறுக்கி சோம்பலை உதறியபடி கடிகாரத்தை பார்த்தேன், மணி பதினொன்றே கால்.


"சீருடையை அணிந்து உடனே தயாராகு. விருந்துக்குப் போகிறோம்"


"முன்னறிவிப்பிலாமல் திடீரென இந்த நேரத்தில் என்ன விருந்து, அதற்கு சீருடைதான் எதற்கு?", ஆச்சரியம் தொனிக்கும் குரலில் நான் கேட்க


"கேள்விகள் கேட்காதே, ஒரு வழியாக கமாண்டரின் அனுமதி கிடைத்துவிட்டது", என்று காதருகே கிசுகிசுத்தான்


அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் நாங்கள் எங்கள் கூடாரத்தை கடந்து வீதிக்கு வந்துவிட்டோம். நாங்கள் நடந்தது நகரத்திற்கு இட்டுச் செல்லும் பாதையில். ஆகாயம் அழுக்காக இருந்தது, தூரத்தில் ஆங்காங்கே தென்பட்ட நெருப்புத்துண்டுகளும், மேலெழுந்த புகையும் நடந்த போரின் எச்சங்களாக இருந்தன. ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் ஆங்காங்கே பணியில் இருந்த எங்கள் ஆட்களைத் தவிர வேறு நடமாட்டமின்றி தெருக்கள் இருண்டிருந்தன. எங்களை எதிர்கொண்ட அவர்களின் பார்வையில் ஏதோ விஷமம் இருந்தது. அவர்களின்மீது மெலிதாக புன்னகையை வீசிய மித்ரா என்னிடம், "பார்த்தாயா விஷயம் கசிந்திருக்கிறது", என்றான். என்னுடைய முறைப்பான அமைதி அவனை வெளியிட வைத்தது.


"நாம் நம் நாட்டை விட்டு வெளியேறி இரண்டு வருடம் இருக்குமா! மற்றவர்கள் ஆடிப்பாடி களித்திருக்க நாம் அல்லும் பகலும் அங்கும் இங்குமாய் அலைந்து திரிகிறோம், இயற்கையான பல்வேறு தேவைகள் பூர்த்தி செய்யப்படாமலே. உயிரை தட்டில் வைத்து தாங்கிச் செல்கிறோம் எவரும் தட்டிவிடாததால் இன்னும் இருக்கிறோம். நாம் ஊர் திரும்ப இன்னும் பலநாள் ஆகலாம், அது வரை எல்லா ஆசைகளையும் அடக்கிக் கொள்ள வேண்டுமா? எத்தனை நாள் இப்படி சுருண்டு படுப்பது? இடைக்கால நிவாரணிக்கு இப்போதுதான் அனுமதி கிடைத்திருக்கிறது."


மூச்சு விடாமல் பேசியவனை நேருக்கு நேர் பார்த்தேன், எனக்கு புரிந்து விட்டது.


"நாம் இப்போது நகரை நோக்கி செல்கிறோம், அதற்கான இடம் ஊருக்கு வெளியேதானே இருக்கிறது?!"


"உண்மைதான், ஆனால் அப்படிப்பட்ட இடங்களை இப்படிப்பட்ட போர்காலத்தில் நம்புவதற்கில்லை, தவிர என்னுடைய ரசனைக்கு அவை ஏற்ற இடமும் இல்லை"


"அப்படியானால்...?"


"நாம் நகருக்குள் வீடுகளை சோதனை இடப்போகிறோம், பதுங்கியிருக்கும் எதிரிகளை இனங்கண்டு பிடிக்கப்போகிறோம்"


"அதாவது அந்தப்பெயரில்..."


எனக்கு இந்த விஷயத்தில் ஈடுபாடு இல்லை என்றாலும், தனியே திரும்ப விரும்பாததால் அவனைத் தொடர்ந்தேன்.


நகருக்குள் வந்ததும் கண்ணில் பட்ட பணக்காரர்களுக்கான காலனி ஒன்றில் நுழைந்தோம். எங்கள் சீருடையைப்பார்த்து அவசரமாக கதவைத்திறந்த காவலாளியின் கண்களில் பணிவை விட பயம் அதிகமாக இருந்தது.


முதலில் கண்ணில் பட்ட பெரிய வீட்டின் கதவைத் தட்டினோம். முதிர்ந்த ஆசிய முகத்துடன் கதவைத் தட்டிய அந்த அறுபது வயது அழகியைப் பார்த்த மித்ராவின் கண்களில் தென்பட்ட ஏமாற்றம் என்னை சிரிக்கத் தூண்டியது. ஆனாலும் விரைத்த முகத்துடன் சோதனைக்கு வந்த விபரத்தை கூறி வீட்டில் யார் யார் இருக்கிறார்கள் என்று கேட்டோம். "என் மகனும் அவனுடைய இரண்டு மகன்களும்", என்று அவள் விடை சொன்ன நேரத்துக்குள் நாங்களே வீட்டுக்குள் ஒரு சுற்று சுற்றி அந்த மூன்று தடியர்களையும் பார்த்துவிட்டு வந்துவிட்டோம்.


இனியொருமுறை ஏமாறப் பிடிக்காதவன் போல மனதுக்குள் ஏதெதோ கணக்குப் போட்டபடி வந்தான் மித்ரா. ஒவ்வொரு வீடாக பக்கவாட்டில் பார்த்தபடி கடந்தவன், ஒரு வீட்டின் முன் நின்றான்.


"இது ஒரு குருட்டுக் கணக்குதான், இந்த வீட்டின் இருபுறமும் இருக்கும் வீடுகளைப் பார், மற்ற ஜன்னல்கள் மூடியிருந்தாலும் இந்த வீட்டின் ஜன்னல்களுக்கு நேரான ஜன்னல்கள் திறந்திருக்கிறது. சோதித்துப் பார்க்க வேண்டியதுதான்"


கதவு தட்டப்பட்டது. கணக்கு தப்பவில்லை, கலைந்த உடையில் தூக்கக் கலக்கத்தோடு கதவைத் திறந்தவளுக்கு வயது இருபது இருக்கலாம். எங்களின் உடையைப் பார்த்த அதிர்ச்சியால் அவளின் அகண்ட கண்கள் மேலும் விரிந்தன, உடல் தளும்பியது. வீட்டினுள் நுழைந்து சொன்னதை நிரூபிக்க நான் ஒவ்வொரு அறையாக சோதிப்பதாக நடித்து அவளின் அறையை அடைந்தபோது அவன் அவளை ஏற்கனவே சோதிக்க ஆரம்பித்திருந்தான். ஆரம்பத்தில் தயக்கம் காட்டியவள் பின்னர் உதடுகளை உறிஞ்சியபடி அவன் மீது ஆவேசமாகத் தாவினாள். நான் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை. அதற்கு மேலும் அங்கே நிற்க என் தன்மானம் இடங்கொடுக்கவில்லை.


வீதியில் தனியனாய் மனம்போன போக்கில், வழியில் கிடந்த கற்களை காலால் எத்தியபடி நடக்கத் துவங்கினேன், மனதில் ஏனோ வெறுமை படர்ந்தது. தனியாக திரும்ப எரிச்சலாக இருந்தது. வேறு அறையில் காத்திருந்திருக்கலாமோ, ஊஹ¤ம், முடியாது, சப்தங்கள் துன்புறுத்தும். பெண்கள் இவ்வளவு எளிதாக அந்நிய ஆடவனிடம் இணங்கிவிடுவார்களா! ஒன்று அவள் உயிருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவளாக இருக்கவேண்டும் இல்லாவிடில் அவளுக்கும் அது தேவைப் பட்டிருக்கவேண்டும். இந்த மித்ரா ரசனை என்று ஏதோ சொன்னானே அதுதான் வேடிக்கை.


எத்திய ஒரு கல் எதிரிலிருந்த வீட்டின் கதவில் பட்டு சப்தமெழுப்பியது. அப்படியே போயிருப்பேன், வீட்டின் முகப்பில் ஒளிரத்துவங்கிய விளக்கு என்னை தடுத்து நிறுத்தியது. சற்று நேரத்தில் கதவும் திறந்தது, சடாரென கதவை விரியத் திறந்தவளின் முகம் பார்த்து எனக்கு மண்டையில் சுரீரென ஒரு அதிர்ச்சி ஏற்பட்டது. அவள் முகத்திலும் அதிர்ச்சி தென்பட்டது ஆனால் சுதாரித்துக் கொண்டு கதவை மூடப்போனாள் ஆனால் அழுத்தித்திறந்து நான் உள்நுழைவதை அவளால் தடுக்க முடியவில்லை. கதவுகளை பொறுமையாக மூடினேன். அவளுடைய முகத்தை சரியாகப் பார்க்க வேண்டும். தலைவேறு வலிக்க ஆரம்பித்துவிட்டது. பயந்துபோன அவள் வெளிச்சம் குறைந்த ஓரத்தில் சுவரோடு ஒட்டி நின்றிருந்தாள். விளக்குகளை உயிர்ப்பித்து, அவளை நெருங்கினேன். அழகு ததும்பும் அந்த முகம்! அந்த முகம், மிகவும் பரிட்சயமானது போல தோன்றியது. ஆனால் நான் அவளை இதற்குமுன் பார்த்ததில்லை. சிலரைப் பார்க்கும்போது இத்தகைய உணர்வுகள் ஏன் ஏற்படுகின்றன?


அவள் உணர்ச்சியற்ற ஜடமாக நின்றிருந்தாள். கண்களில் மட்டும் வெறுப்பு தென்பட்டது. அது எனக்கு பிடிக்கவில்லை. என் கேள்விகளுக்கு ஒழுங்காக பதில் சொல்லியிருந்தால் அறைய வேண்டிய அவசியம் இருந்திருக்காது. அவள் அதற்கும் கலங்கியவளாகத் தெரிய வில்லை, தனக்குள் மந்திரத்தை உச்சரிப்பவள் போல ஏதோ முணுமுணுத்தாள். மதிக்காத தன்மையும், ஆவேசமான பார்வையும் எனக்கு வெறியேற்றியது. என் கூரிய பார்வையால் அவளை ஒருமுறை முழுவதுமாக வருடினேன். அதே நேரத்தில் என் பின்புறம் ஏதோ மெல்லிய சப்தம், எங்கள் இருவரைத் தவிர இன்னும் யாரோ இருக்கிறார்கள். அவளை அங்கேயே விட்டுவிட்டு ஒரு சுற்று தேடினேன்,

ஒருவரும் இல்லை. வினோதம்தான்! இதுவரை என் புலன்கள் என்னை ஏமாற்றியதில்லை.


மீண்டும் அவளை நெருங்கும் வரை அசையாமல் இருந்தவள் கையில் மறைத்து வைத்திருந்த பூச்சாடியை என் தலையில் முழு பலத்தோடு இறக்க முயன்றாள், இதை எதிர்பார்க்காத நான் வேகமாக நகர்ந்தும் பலன் இல்லை; தோளில் பட்டு சுரீர் என்றது. கோபம் மண்டையின் உச்சிவரை ஏறியது. சுவரோடு சுவராக அவளை என்னுடலால் நசுக்கி கையில் வைத்திருந்ததை பிடுங்கி எறிந்தேன். அவளுடலின் திண்மையும் வளைவுகளும் என் புலன்களுக்கு புலப்பட்டது. அவள் என்னை கடிக்கவும் உதைக்கவும் முயன்றாள். பிராண்ட முயன்ற கைகளை அவளுடைய மேலாடையைக் கொண்டே கட்டி படுக்கையில் தள்ளி அவள் மேல் அமர்ந்தேன்.


இப்போதாவது கண்ணில் பயம் தெரிகிறதா, ஹ¥ம் இல்லை. ஆனால் அவள் வயிற்றில் ஒரு மெல்லிய நடுக்கம் ஓடுவதை கவனித்தேன். திருப்தியாக இருந்தது. அப்போது அவள் உடலை வில்லாக வளைத்து தாடையில் வலுவாக மோதினாள். நாக்கைக் கடித்துக் கொண்டுவிட்டேன் போலிருக்கிறது வாயில் உப்புக்கரித்தது. தொடர்ந்து அடித்த அடியில் துவண்டு கிடந்தாள். அவளின் வனப்பு என்னை ஈர்க்க அவள்மீது கவிழ்ந்து புணரத் துவங்கினேன். சிறிதே நேரத்தில் அவளும் எனக்கு ஒத்தசையத் துவங்கினாள். ஹ! என்னுடைய ஆண்மையின்மேல் எனக்கு நம்பிக்கை பெருகியது.


அவள்


அப்படியே தூங்கிவிட்டேன் போலிருக்கிறது, வெகுநேரமாக அழுதிருக்கவேண்டும் இரண்டு பக்கமும் கோடாக உப்பு படிந்திருக்கிறதே. உறக்கத்தால் அமுங்கியிருந்த துக்கம் அடிவயிற்றிலிருந்து மீண்டும் கேவலாக புறப்பட்டது. எப்போதும் அவனுடன் சண்டை போட்டிருந்தாலும் அண்ணனோடான என் உறவுதான் எவ்வளவு வலிவானது. பிரிவின் வலியில் அதை நான் வெகுவாக உணர்கிறேன். இனி நான் யாரிடம் சண்டை பிடிப்பேன்


போரை நான் மிக வெறுக்கிறேன். அதனால் நான் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறேன். வியாபார நிமித்தமாக பெற்றோர் வெளிநாடு சென்ற பிறகு திடீரென ஒருநாள் தாக்குதல் துவங்கியது. தொலைதொடர்பும் விமானப் போக்குவரத்தும் நின்று போயின. அவர்களால் நாடு திரும்ப முடியவில்லை. வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டது. நானும் அண்ணனும் மிகவும் சிரமப்பட்டோம். வீட்டில் உணவுப்பொருள்கள் எல்லாம் தீர்ந்துபோனது. நான் பசி தாங்கமாட்டேன் என்றுதானே அவன் வெளியே போனான்.


கைகளைப் பார்த்தேன். நீளமான நகங்கள் மீண்டும் அண்ணனை நினைக்க வைத்தன. அவனுக்கு இப்படி நகம் வளர்ப்பது பிடிக்காது. திட்டியபடி இருப்பான். நான் ஒரு நாளும் அதை கண்டுகொண்டதில்லை. இப்போதாவது செய்வோம் என்று தோன்றவே நகங்களை சீராக நறுக்கினேன். அண்ணனின் அறிவுரைகள் ஒவ்வொன்றாக நினைவுபடுத்திக் கொண்டேன்.


அப்போதுதான் கேட்டது கதவுதட்டும் சப்தம், அழைப்பு மணி இருந்தாலும் அண்ணன் எப்போதும் லொட்டென்று கதவைத்தட்டித்தான் அழைப்பான். அவன் தட்டும் சப்தம் எனக்கு நன்றாக அடையாளம் தெரியும். இதோ தட்டுகிறானே, இரண்டு முறை தட்டினால்தான் திறக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறான். இன்னும் ஏன் தட்டவில்லை? இப்படி விளையாடுவதே இவனுக்கு வழக்கமாக போய்விட்டது


ஓடிப்போய் கதவைத் திறந்த பின்புதான் அவன் இறந்து போன உண்மை சுள்ளென்று உறைத்தது. எனக்கு பைத்தியந்தான் பிடித்துவிட்டது இல்லாவிட்டால் இப்படி குழப்பிக் கொள்வேனா? தப்பு செய்துவிட்டேன், வெளியே நின்றவன் எதிரி ராணுவத்தைச் சேர்ந்தவன். என் அண்ணனை கொன்றவர்களில் ஒருவன். அந்த உடையைப் பார்த்தாலே எனக்கு பற்றிக்கொண்டு வருகிறது.


கதவை மூடும் முன் உள்ளே வலிந்து நுழைந்து விட்டான். அவனுடைய பார்வையே எனக்கு பிடிக்கவில்லை. தனிமையில் இருக்கும் வேற்று நாட்டுப் பெண்ணை இப்படி ஓநாய்ப் பார்வை பார்க்க அவசியம் என்ன வந்தது. அண்ணன் என்னை கராத்தே கற்றுக் கொள்ளச் சொல்லி பலமுறை வற்புறுத்தினான் நான் பிடிகொடுக்காமல் போனதற்கு இப்போது வருத்தப்படுகிறேன். என்னால் போரிட முடிந்தால் என் அண்ணன் சாவுக்கு பழிவாங்கிவிடலாம். இது போன்ற சூழலில் நாம் பயப்படுவதாக காட்டிக் கொள்வது எதிராளியைத் தூண்டிவிடுவது போலாகும் என்று படித்திருக்கிறேன். எனவே என் உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதில்லை என்று சங்கல்பம் செய்து கொண்டேன். அவன் என்னைப் பார்க்கும் போதெல்லாம் என் உடல் கூசியது. எப்படி தப்பிக்கப்போகிறோம் என்று கவலை வந்தது. நம்பிக்கையை இழந்துவிடாதே, ஒரு நொடியில் கூட அனைத்தும் மாறலாம் மனந்தளராதே என்று மனதுக்குள் திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டேன். ஏதேதோ கேள்விகள் கேட்டான், நான் மெளனம் காத்தேன். சுளீரென்று அறைந்தான், நான் வலியடக்கினேன்.


ஏதோ சப்தம் கேட்டு அவன் என்னை விட்டு விலகினான், பித்தளையில் செய்த கனமான பூச்சாடியை பின்னால் ஒளித்து வைத்து அவன் திருப்பிவந்ததும் தலைக்கு குறிவைத்து முழு பலமும் சேர்த்து வீசினேன், நகர்ந்து தோளில் வாங்கிக் கொண்டான். அடி நன்றாகப்பட்டது அவனுடைய முனகலில் இருந்து தெரிந்தது. இதையே சாக்காக்கிக் கொண்டு என் உடலில் அழுந்தினான். எனக்கு அருவருப்பாக இருந்தது. ஆயுதத்தை பிடுங்கியவன் பிறகு ஆடையையும் பிடுங்க முயன்றான். தடுக்க முயன்ற நான் வெற்றி பெறவில்லை. என் தாயிடம் கூட நான் காட்டக் கூசிய அரை நிர்வாணம் ஓர் அந்நிய ஆடவன் முன், வேதனை பிடுங்கித் தின்றது சுய பச்சாதாபம் என்னை சூழ்ந்துகொண்டது.


நடக்கப் போவது இதுதான் என்றால் என் தெம்பின் கடைசித்துளி உள்ளளவும் போராடுவேன் என்று என்னை திடப்படுத்தி க்கொண்டேன். என் மீது அமர்ந்த அவனை கைகள் கட்டப்பட்ட நிலையில் என்னால் தடுக்க முடியவில்லை. கடைசி முயற்சியாக என் தலையைக் கொண்டு அவனுடைய தாடையில் வலுவாக மோதினேன். அதனால் பெரிதாக பலன் ஏதும் இல்லை. அவன் என்னை சரமாரியாக அடிக்கத் துவங்கினான். என்னால் நடப்பதை இன்னும் நம்ப முடியவில்லை எனக்கா இதெல்லாம் நடக்கிறது? எல்லாம் கனவாகி என் அண்ணன் வந்து என்னை எழுப்பினால் எவ்வளவு நன்றாக இருக்கும்! இல்லை, இதெல்லாம் கனவில்லை பெண் என்பவள் வெறும் உடல் மட்டும் அல்ல என்பதை உணராத மூர்க்கனின் கையில் சின்னாபின்னப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அவன் என் உள்ளாடைகளை கிழித்தெறிந்தபோது என்னால் உடலை அசைக்கக் கூட முடியவில்லை. இதற்கா நான் பிறந்தேன், இப்படி அழிவதற்கா? என் தாயே, தந்தையே என்னை இத்தனை காலம் காத்து வளர்த்தது இப்படி நான் இப்படி நலிந்து போவதற்கா? என் பிறவிப்பயனே இதுதானா? இப்படி வெறும் உடலாய் போவதற்கா இத்தனை காலம் சிந்தித்திருந்தேன்? இதற்கு பதில் அண்ணனைப் போல நானும் உயிரை விடுவேனே. கண்ணில் நிரம்பி வழியும்

கண்ணீரை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை


எண்ணங்கள் குறுக்குக் கோடுகளாக ஒன்றையொன்று வெட்டின. உணர்வில்லாமல் உடலில் எங்கெங்கோ வலித்தது. கடைசி வாய்ப்பும் நழுவிவிட்டது. இவனுக்கொரு இன்பம்தரும் எந்திரமாக உயிர் தரிக்க நான் விரும்பவில்லை. நடப்பவை என்னுள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த அதிர்ச்சி அலையலையாய் என் நரம்புகளில் ஊடாடியது, வாயில் நுரை தள்ள, வெட்டி வெட்டி இழுக்க ஆரம்பித்தது.


அவர்கள்


'உணர்வுகள் அப்படியே தனித்தனியே கழன்று போனதுபோல ஒரு சுழலாக இறங்கி மறைந்தது மெலிதாக தூரத்தில் ஏதோ ஓசை கேட்க, அட! அங்கே இருப்பது நானல்லவா? எனக்கு வெளியே நான் இருக்கிறேன் என்றால் நான் இறந்துவிட்டேனா? அப்படியானால் அங்கே என் உடல் அசைவது எப்படி, அட பேசவும் செய்கிறதே! என்ன சொல்கிறது?'


"நவண் பதட்டப்படாதே, உணர்வுகளை மெல்ல கட்டுக்கு கொண்டு வா, சிந்தனைகளை தவிர். நான் உனக்கு முழுமையாக விளக்குகிறேன்"


'என்னை ஏன் நவண் என்கிறாய்? நான் ஏன் ஏதோ திரவத்தில் அமிழ்ந்திருக்கிறேன். நான் இங்கிருக்கிறேன் என்றால் நீ யார்? ஐய்யோ! என்னால் சிந்தனைகளை நிறுத்த முடியவில்லையே, ஏதோ பெரும் குழப்பம் இருக்கிறது, நான் மயங்குகிறேனா என்ன?'


சற்று நேரம் கழித்து...


வினோதமான எந்திரங்கள் சூழ்ந்த அறையில் அவர்கள் இருவரும் அமர்திருந்தனர். அவன் ஓய்வு நாற்காலியில் சாய்ந்தபடி இன்னும் பிரம்மை நீங்காமலே, அவள் உற்சாக முகத்துடன் பக்கத்தில் சிறு இருக்கையில்.


கணீரென்ற குரலில் தெளிவாக, அழுத்தமாக, ஒவ்வொரு சொல்லாக உச்சரித்தாள்.


"நவண், பொறுமையாக நினைவுபடுத்திக்கொள், நீ ராணுவத்தில் இரண்டாம் நிலைப் பயிற்சியில் இருக்கிறாய், பயிற்சி நிமித்தமாக இன்று காலை இந்த அலுவலகத்துக்கு வந்தாய்"


"..."


"என்னைப் பார்த்துக் கூட ஆச்சரியப்பட்டாய், உன் காதலியான நானும் ராணுவத்தில் வேலை பார்ப்பது உனக்குத் தெரியும், ஆனால் என்ன வேலை என்று உனக்குத் தெரியாது"


"..."


"இன்றைய பயிற்சியை செயல்படுத்தப் போவது நான்தான் என்றேன். உன்னை இங்கே இந்த திரவத்தில் அமிழ்த்தி கருவிகளைப் பொருத்தினேன். அதன் பின் அங்கே இருக்கும் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கையசைத்தேன்"


"லேசாக ஞாபகம் வருகிறது"


"நவண், நீ எடுத்துக்கொண்ட பயிற்சியைப் பற்றி முழுவதும் புரிந்து கொள்ள நான் வரலாற்றிலிருந்து துவங்க வேண்டும் "


"ம்..."


"போர் வரலாற்றின் இரத்தக் கறை படிந்த எந்த ஏட்டைப் புரட்டினாலும் அதில் கொடுமைக்கு ஆளாகும் பெண்களின் கண்ணீரும் கலந்திருக்கும், பொதுவாக எதிரி நாட்டுப்பெண்கள் போகப்பொருளாகவே பயன்படுத்தப் பட்டார்கள்.


பல நூற்றாண்டுகளாக இந்த நிலை நீடித்தது. இந்த நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மகளிர் அமைப்புகள் இந்தப் பிரச்சனையை தீவிரமாக எடுத்துக் கொண்டு போராடத் துவங்கின.


ஆரம்பத்தில் அரசியல் தலைவர்கள் இதில் அக்கறை காட்டவில்லை. பின்னர் இதனால் நேரும் இனக்கலப்பை முன் வைத்து எதிர்ப்பு அலைகள் கிளப்பப்பட்டன, அதன் பிறகு அரசியல் தலைவர்கள் ஏதேனும் செய்யவேண்டிய நெருக்கடிக்குள்ளானார்கள்.


உலக மாநாட்டின் போது எதிரி நாட்டு ஆணோ, பெண்ணோ பாலியல் ரீதியாக வன்முறைக்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ள ஆவன செய்வதாக அனைத்து நாடுகளும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டன."


அவனுக்குள் குற்றவுணர்ச்சி முகாமிட்டிருந்தது, அவளின் முகம் உற்சாகத்துடன் காணப் பட்டாலும் மறைக்க முயன்ற கவலையை அவனால் அடையாளம் காண முடிந்தது. அது அவனை இன்னும் குத்தியது. புரிந்ததோ இல்லையோ அவன் தலையாட்ட அவள் தொடர்ந்தாள்.


"இதே நேரத்தில் ஏற்பட்ட விஞ்ஞான மாற்றங்களையும் குறிப்பிடவேண்டும். மூளையில் எண்ணங்களை நேரடியாக பதிவு செய்யும் முறையை விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருந்தனர், அதைப் பயன்படுத்தி ராணுவ வீரர்களின் மனதில் கட்டுப்பாடுகளை விதைக்க அவர்கள் பரிந்துரைத்தனர்.

ஆனால் மொத்த ராணுவமும் விஞ்ஞானிகளின் கையில் போய் விடக்கூடிய அபாயம் இருக்கிறது என்று ராணுவ அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதே தொழில் நுட்பத்தின் மாறுபட்ட வடிவம் சிமுலேட்டர்களின் சகாப்தத்தில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது.

புலன்களை திசை திருப்பும் சிமுலேட்டர்கள் போன நூற்றாண்டிலேயே வந்துவிட்டன. ஆனால் அந்த சிமுலேஷன்களுக்குள் அமிழும் முன் நாம் மனதில் பதித்து வைத்துக்கொள்ளும் முதல் விஷயம், இதில் உண்மையில்லை என்பது. இதனால் சிமுலேஷன் எவ்வளவு தத்ரூபமாக இருந்தாலும் உன்னால் பிரித்துணர முடியும்.

நீ வளர்ந்த சூழல், சந்தித்த சம்பவங்கள் இதன் அடிப்படையில் வளர்த்துக் கொண்டுவிட்ட நம்பிக்கைகள், சித்தரிப்புக்கள் இவற்றை மாற்றுவது சுலபமல்ல அதைத்தான் இந்த நூற்றாண்டில் சாதித்திருக்கிறோம்.

இனி நான் சொல்லப் போவதை முக்கியமாக கவனி"


"சரி"


"சிமுலேட்டர் எப்படி செயல்படுகிறது என்றால், அது உன் மனதை இரண்டு நபர்களாக பிரிக்கிறது. ஒரு குறிப்பிட்ட சம்பவத்திற்கு நகர்த்துகிறது, அதில் ஒரு நபராய் நீயே ஆணாக செயல்படுகிறாய், இன்னொரு நபராய் நீயே பெண்ணாக அந்த செயல்களால் பாதிக்கப்படுகிறாய். எல்லாம் ஒரே நேரத்தில் நிகழ்கிறது.


ஆனால் உணர்வடுக்குக்கு எது கொண்டுவரப்படுகிறதோ அதை மட்டுமே நீ அனுபவமாக உணர்வாய். உதாரணத்திற்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி உள்ளவர்களுக்கு தங்களின் இரவு நடப்பு அனுபவம் உணரப் படாது.


முதலில் ஆணாய் நீ செயல் பட்டது தான் மூளையின் உணர்வடுக்குக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. முழுக்க ஆணாக நீ அப்போது செயல்படுகிறாய். அந்த சிமுலேசன் முற்றுப்பெற்ற பின் உன்னுடைய பெண் பாத்திரம் உன் மனதில் அரங்கேறுகிறது


முடிவில் பெண்ணாய் நீ உணர்ந்தவை உன் நினைவுகளில் நீங்கா இடம்பெறுகிறது. இதன் காரணமாக உண்மையாக இந்த காரியத்தில் ஒரு போதும் ஈடுபடமாட்டாய்."


"ஓ! அப்படியா?"


"ஆம், முழுக்க தங்கள் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கவேண்டும் என்கிற உறுதிமொழி வாங்கிக்கொண்டு இந்ததிட்டத்துக்கு ராணுவ அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். ராணுவத்தில் பயிற்சி பெறும் ஒவ்வொருவரும் இந்த பயிற்சியும் கட்டாயம் எடுக்கவேண்டும். இந்த சிமுலேஷன்களை உருவாக்கும், பராமரிக்கும் பணி என்னுடையது"


"ஓ! அதனால் தான் ராணுவத்தில் நீ என்ன வேலை செய்கிறாய் என்று கேட்டதற்கு மழுப்பினாயா?"


"ஆம், நீ இந்த பயிற்சி எடுக்கும்வரை இதைப்பற்றி நான் கூறமுடியாதில்லையா!"


"சரி அதில் என்னுடைய பெண் பாத்திரத்தில் உன் உருவம் எப்படி வந்தது"


"நீ இன்னொரு பெண்ணின் உடலைப் பார்ப்பதில் எனக்கு சம்மதம் இல்லை, எனவே இந்த சிமுலேஷனுக்கு என்னுடைய உடலை வழங்கியிருந்தேன். அதாவது என் உடல் பற்றிய தகவல்களை. இப்படி செய்துகொள்ள காதலிகளுக்கும் மனைவிகளுக்கும் அனுமதி உண்டு."


"அந்த வலிப்பு ஏன் வந்தது?"


"நம் புலன்களும் உணர்வுகளும் சிமுலேட்டரால் வலிந்து திருப்பப்படும் போது அதை நாம் வலியாக உணர்வோம். உதாரணம், நீ என்னுடைய உருவத்தை இனங்காண முயற்சித்தபோது ஏற்பட்ட தலைவலி. தாங்கமுடியாத எதையும் வலியாக நம் உடல் உணர்த்துவது போல, மனதால் தாங்க முடியாத நிலை வந்தால் சிமுலேட்டர் அதை ஏதாவது வலியாக உணர்த்தும்.


நீ பெண்ணாக மிகவும் உணர்ச்சி வசப்பட்டு விட்டாய், நான் மட்டும் சிமுலேஷனை நிறுத்தி உன்னை எழுப்பியிருக்கா விட்டால் உன் நிலைமை மோசமடைந்திருக்கும். சிமுலேஷன் முழுவதுமாக முடிந்திருந்தால் நான் உனக்கு விளக்கம் சொல்ல அவசியம் இருந்திருக்காது, அதுவே முழு விளக்கம் கொடுத்துத்தான் எழுப்பும்.


சரி, நீ ஏன் உற்சாகமிழந்தவனாகவே இன்னும் இருக்கிறாய்?"


"குற்றவுணர்ச்சி என்னை வதைக்கிறது, உன்னை நான் கற்பழித்துவிட்டதுபோலவே உணர்ந்து வெட்கிப்போயிருக்கிறேன்"


"தேவையில்லாமல் குழப்பிக்கொள்ளாதே, நடந்ததில் உன் தவறு ஏதுமில்லை. இது ஒரு சமூகப் பிரச்சனை, இதை உன்னுடைய தனிப்பட்ட பிரச்சனை என்று நினைத்து மருகாதே, உன்னுடைய தன்னம்பிக்கையும் ஆணவமுமே என்னை காதலிக்கத் தூண்டியது, அந்த அடிப்படைத் தகுதிகளை இழந்துவிடாதே! சரி, வா நாம் கிளம்புவோம்"


அவள், அவனை ஆறுதலாக அணைத்து நடத்திச் சென்றாள். அவர்கள் அந்த பிரம்மாண்டமான கட்டிடத்தில் இருந்து வெளியே வந்தார்கள்.


"நீ எனக்கு ஆறுதல் சொல்கிறாய் ஆனால் உன் மனதில் என் நடத்தை உறுத்திக்கொண்டிருக்கிறது. உன் கவலை படிந்த முகம் எனக்கு அதைச் சொல்கிறது! நீ என்னை வெறுத்து விட்டாய் அப்படித் தானே?"


"சே சே, அப்படியெல்லாம் ஏதும் இல்லை. நீ ஒரு பத்து நிமிடம் எனக்காக காத்திருக்க முடியுமா? எனக்கு ஒரு அலுவல் இருக்கிறது முடித்து விட்டு உடனே திரும்பிவிடுவேன்."


"சரி இந்த பூங்காவில் காத்திருக்கிறேன்"


அவள் என்னதான் ஆறுதல் சொன்னாலும் அவள் பாதிக்கப்பட்டிருப்பது நிஜம் என்று நினைத்தான், அவள் அவனை விட்டுச்சென்றது அதனை உறுதிப்படுத்துவது போல இருந்தது. சில நிமிடங்களுக்கு பிறகு திரும்பிய அவள் முகம் தெள்ளத் தெளிவாக இருந்தது. அவள் மனநிலையை சீராக்கிக்கொள்ளவே நேரம் எடுத்துக் கொண்டாள் என்று அவன் நினைத்தான்.


அவள் அவன் உள்ளம் புரிந்தவள் போல் நடந்தபடியே பேச்சை தொடங்கினாள்.


"நீ குழப்பிக்கொள்வதற்கு முன்பு நானே சொல்லி விடுகிறேன், காலையில் முதலில் ஒருவனை சந்தித்து கை குலுக்கினாயே, ஞாபகம் இருக்கிறதா. என்னுடைய சக ஊழியனான அவனுக்கு என் மேல் ஒரு கண். என்னுடைய உடல் சிமுலேஷனில் வரப்போவது தெரிந்ததும் சில திருட்டுத்தனங்கள் செய்தான்.


பயிற்சிக்கு உள்ளாகும் நபர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டால் மருத்துவரிடம் காண்பிப்பதற்காக சிமுலேஷன் பதிவு செய்யப்படுகிறது. அது மனநல மருத்துவரின் பார்வைக்கு மட்டுமே, இவன் அதில் உள்ள ஒரு ஓட்டையைப் பயன்படுத்திக்கொண்டு சிமுலேஷனில் அரூபமாக நுழைந்துவிட்டான். உன்னுடைய புலன்கள் அவனை அடையாளம் கண்டன, அப்போதுதான் நான் அதைத் தெரிந்து கொண்டேன். ஆனால் நீ உள்ளே இருக்கும் நேரத்தில் ஏதும் செய்து சிக்கலாக்கிவிட வேண்டாம் என்று விட்டுவிட்டேன். அவனுக்கு ஒரு பாடம் புகட்டவே சென்று வந்தேன்."


"என்ன செய்தாய்?"


"அவனுடைய நுழைவு வழியை மாற்றி அமைத்துவிட்டேன், இனி இப்படி நுழைந்தால் சிமுலேட்டர் அவனைப் பெண்ணாக்கி இலவச கருக்கலைப்பு செய்யும், அந்த நினைவுகள் அவனை சுற்றி சுழலாய் கலங்கடிக்கும்."


"சிமுலேஷனாக வந்ததெல்லாம் அந்த எந்திரத்தின் கற்பனையா?"


"இல்லை, அதெல்லாம் நாங்கள் கடந்த காலத்திலிருந்து சிரமப்பட்டு திரட்டிய தகவல்கள். பெரும்பாலும் இப்படி பாதிக்கப்படுபவர்கள் உயிர்வாழ்வது அரிது என்பதால் தகவல் திரட்டும் பணி எளிதாக இல்லை, ஆனால் நீ பார்த்த அந்த சிமுலேஷன்தான் மற்றதைவிட துல்லியமானது, ஏனென்றால் தகவல்கள் முழுசாக கிடைத்தன"


இதைச்சொல்லிவிட்டு அவள் நாக்கைக் கடித்துக்கொண்டாள், 'சே! சொல்லியிருக்க வேண்டாம்.'


"எப்படி, அவளை சந்திக்க முடிந்ததா? தன்னம்பிக்கையோடு அவள் வாழ்வை எதிர்கொண்டாளா?"


"வேண்டாமே, இப்போதுதான் நீ இயல்புக்கு திரும்பியிருக்கிறாய்"


"என்னிடம் மறைக்காதே, சொல்லப்படாத எந்த ரகசியத்தையும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது"


"தன்னுடைய வேலையை முடித்துக்கொண்ட அவன் பிறகு அவளின் தலையை வெட்டி பிரிட்சுக்குள் வைத்துவிட்டதால், உறைந்து கிடந்த மூளையில் தகவல்கள் அழியாமல் இருந்தது"


வற்புறுத்தி கேட்டிருக்க வேண்டாம் என்று அவனுக்கு இப்போது தோன்றியது, ஏனோ மனமெல்லாம் பாரமாக இருந்தது. அதன்பின் அவர்கள் பேசாமல் நடந்தார்கள்.


அவள் அவனிடம் எல்லாமே சொன்னாள்தான். ஆனால் சிமுலேட்டர் முதல் பதினைந்து நிமிடங்கள் வழி நடத்துவதோடு சரி அதன் பின் எல்லாமே அவரவர் செயல்தான் என்பதையும், இது பயிற்சி அல்ல சோதனை என்பதையும், இவனுடைய குறிப்புக்களில் தான் ரகசியமாய் செய்த மாற்றத்தையும் ஏனோ சொல்லவே இல்லை.

(முற்றும்)

கருத்துகள்

அதிகம் பார்க்கப்பட்ட பதிவுகள்

கைப்பேசிக்கான முதல் தமிழ் மின்நூல் வெளியீட்டு விழா!

உங்களோட செல்பேசியை இரண்டுல ஒண்ணு பாத்துடுவோமா?

பிரசவத்தில் கணவனின் பங்கு