பாதுகாவல் (முதல் பதிப்பு)

[கதையின் கதை: இந்த கதை infotainment (information + entertainment) எனும் உத்தியுடன் எழுதப்பட்டுள்ளது அதாவது கதையுடன் தொடர்புடைய அறிவியல் துணுக்குகள் கதையுடனே கொடுக்கப்பட்டுள்ளது. முறைப்படி இவை வலது அல்லது இடது ஓரத்தில் பத்திகளாகத் தரப்பட வேண்டும், ஆயினும் இங்கே மடல்களில் HTML உபயோகிக்க இயலாததால் இடையிடையே தரப்பட்டிருக்கிறது. அவைகளை நீங்கள் பிரித்துணரும் வசதிக்காக '[', ']' ஆகிய குறியீடுகளுக்கிடையில் உள்ளிட்டிருக்கிறேன், கதையோட்டத்தைவிட்டு விலக பிடிக்காதவர்கள் அவற்றைத் தனியே படித்துக் கொள்ளலாம்].


இனி கதை...

ஃ ஃ ஃ


அறிமுகம்

பெயர்: சிவா

வயது: 28

தொழில்&பொழுதுபோக்கு: நூதன முறையில் திருட்டு, கொள்ளை

நீண்டகால சாதனை: உயர் தொழில்நுட்பத் திருடர்கள் பட்டியலில் 5 ஆவது இடம்.

சமீபத்திய சாதனை: உலகப் புகழ் பெற்ற கின்வுட் மருத்துவமனையில் இருந்து 25 செயற்கை இருதயங்கள் திருட்டு


சிவா:

முழுக்க இயந்திரமயமான அறையில், சீரான இயக்கத்தில் இயந்திரக் கைகள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்க அவைகளின் இடைவெளியில் நான் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருந்தேன். நான் கால் வைக்கும் பாதையிலிருந்து, இம்மி அளவு பிசகினாலும், இயந்திரக் கைகளினால், அரைபட்டுவிடும் சூழல். கூரான ஒரு இரும்புக்கரம் என் நெஞ்சைக் குறி வைத்து வருவதைக் கடைசி நொடியில் கவனித்தேன், பின் வாங்குவதற்குள் இனிமையான ஒரு பெண்ணின் குரல் என்னை உலுக்கியது. சே! இந்த இயந்திரங்களுக்கு விவஸ்தையே கிடையாது, இன்றும் சரியாக கனவில் இதே இடத்திலா எழுப்பவேண்டும்.


இதே கனவு எனக்கு ஏழெட்டு முறை வந்துவிட்டது. ஒவ்வொரு முறையும் ஒரே இடத்தில் ஏதாவதொரு காரணத்தால் கனவு கலைகிறது. இந்த முறை ஷைல். எரிச்சலுடன் நான் கண்களைத் திறந்தபோது, அது மீண்டும் ஒரு முறை காலை வணக்கம் சொன்னது. ஓ! இன்னும் நான் ஷைலை உங்களுக்கு அறிமுகப்படுத்தவில்லை இல்லையா? இது ஷைல் என் இனிய இயந்திரத் தோழி, அந்தரங்க காரியதரிசி, இன்னும் எவ்வளவோ. என் தினப்படி காரியங்களை நேரம் தவறாமல் செய்வதற்கு ஷைல் மிகவும் உதவியாக இருக்கிறது.


சற்று பொறுங்கள்! ஷைல் மீண்டும் என்னை அழைக்கிறது. "மன்னிக்கவும், நீங்கள் காலை 7:02 மணிக்கு புதிய தொழில் நுட்ப ஆயுதங்களைப் பற்றிய மாநாட்டில் கலந்துகொள்வதாக நேற்று முடிவு செய்திருந்தீர்கள். இப்போது எழுந்தால்தான், நீங்கள் நீராவிக் குளியல் முடித்துக் கிளம்பச் சரியாக இருக்கும். இது தவிர உங்களுக்கு ஒரு தகவல் வந்திருக்கிறது" என்று ஷைல் கூற, நான் "படி" என்றேன். 'மிக முக்கியம், அதி ரகசியம் போன்ற குறிகளுடன், உங்களுக்கு பிரத்யேக இணைப்பு மூலம் இந்த தகவல் வந்துள்ளது' என்னும் முன்னுரையுடன் படித்தது.


காலை வணக்கம்,


உயர் தொழில் நுட்ப திருடர்கள் பட்டியலிலிருந்து உங்களது தகவல் பெற்றேன். நீங்கள் மிகவும் விரும்பக்கூடிய சிக்கலான ஒரு வேலை என்னிடம் உள்ளது. ஏனோ, இதைச்செய்வதற்கு முற்றிலும் சரியான நபர் நீங்கள்தான் என்று எனக்குத் தோன்றியது. இது பற்றி, மேலும் விவரமாகப் பேச விருப்பம் இருந்தால் எங்கே, எப்போது சந்திப்பது என்று கீழ்கண்ட என் பிரத்யேக முகவரிக்குத் தகவல் அனுப்பவும்.


நம்பிக்கைக்குரிய

க.மரியா

[124357673-07696465896746568-73458563]


என் உடல் முழுவதும் ஒருவித சிலிர்ப்பு ஓடியது. மீண்டும் ஒரு சிக்கலான பணி என்னை நெருங்கிக்கொண்டிருக்கிறது. யார் இந்த மரியா? தொலைபேசி முதல் அனைத்திலும் எழுத்துக்களையே பயன்படுத்தும் இந்த யுகத்தில் வெறும் எண்களால் முகவரி தரும் இந்தப் பெண் எனக்கு வித்யாசமானவளாய் தோன்றுகிறாள். அவளை உடனே பார்க்கும் ஆவல் என்னை உந்தியது. உடனே முடிவெடுத்தேன். இந்தத் தொழில் நுட்ப மாநாட்டில் ஒன்றும் பிரமாதமாகச் சொல்லப் போவதில்லை, ஐந்து வருடத்திற்கு முன் நான் பயன்படுத்திய கருவிகளையும், நுட்பங்களையும் பற்றி இப்போதுதான் விவாதிப்பார்கள்.


ஷைலிடம் முதலில் நான் மாநாட்டில் பங்குபெறுவதை ரத்து செய்துவிட்டு, மரியாவை 7.35 க்கு புளூ பாய்சன் (Blue Poison) உணவகத்தில் சந்திப்பதாக மரியாவிற்கு தகவல் அனுப்புமாறு கூறினேன்.


அவசரமாக குளியல் முடித்து, வழக்கம்போல் பத்து நிமிடம் முன்னதாகவே விடுதியை அடைந்தேன். பின்புற வாசலுக்கு அருகிலுள்ள ஒரு மேசையைத் தேர்ந்தெடுத்து, நான் கொண்டுவந்த பொருட்களை வைத்தேன். உடன் பின்புற வாயில் வழியாக வெளியேறி முன்புற வாயில் நன்கு தெரியும்படியான மறைவிடத்தைத் தேர்ந்தெடுத்து நின்றுகொண்டேன். இந்த எச்சரிக்கை நடவடிக்கை என் தொழிலுக்கு மிக மிக முக்கியமானது. சரியாக 7.30க்கு புத்தம் புதிய சமீபத்திய வகை தானியங்கி வாகனம் வாசலில் நின்றது. அதன் கதவுகள் மேல் நோக்கித் திறக்க அதிலிருந்து அவள் இறங்கினாள்.


அவள் மரியாதான், என் உள்ளுணர்வு சொல்லியது. அவளைப் பார்த்தால் ஆடை அலங்காரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவளாகத் தெரியவில்லை ஆனாலும் அழகாக இருந்தாள். நீல நிற வைரக்கல் அவளின் வெளிர் நீலக் கூந்தலுக்கு எடுப்பாக மின்னியது. அவள் கண்களில் தோன்றிய துறுதுறுப்பு என்னை ஏதோ செய்தது. அவள் உள்ளே நுழையும் முன் விரைந்து என் இருக்கையை அடைந்தேன். என்னைக் கண்டுபிடிக்க அவள் அதிகம் சிரமப்படவில்லை.


உள்ளே நுழைந்ததும் சுற்றி ஒரு முறை பார்வை வீசியவள் நேராக என் அருகே வந்தாள். என்னை நெருங்கி "ஷிவா?" என்று உதடுகளை சப்தமின்றி அசைத்தாள். நான் "மரியா?" என்று சொல்ல வாய்திறக்கும் முன் அவள் என் கையை அழுத்தி முகத்தில் எந்தவித சலனமும் இன்றி கண்ளால் மட்டும், "வெளியே சென்று பேசிக்கொள்ளலாம்", என்றபடி தன் வாகனத்தை நோக்கிச் செல்ல, பின் தொடர்ந்தேன். அவளின் இந்த எச்சரிக்கை நடவடிக்கைகள் என்னுள் ஆச்சரியத்தை ஏற்படுத்தி, அவள் கற்றுக்குட்டி அல்ல என்பதை உணர்த்தியது, வழக்கமாக வாடிக்கையாளர்களிடம் இவ்வளவு எச்சரிக்கை உணர்வு இருப்பதில்லை. நான் தான் எல்லா விஷயங்களையும் சொல்லிக்கொடுக்க வேண்டி இருக்கும்.


[தொழில்நுட்பத்தில் இன்று : ஸ்கிராம்பிளர் - தொலைபேசியில் நாம் நிகழ்த்தும் (இரகசிய)உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுகிறது எனும் சந்தேகம் வந்தால் இக்கருவியை பயன்படுத்தலாம். இவை நாம் பேசும் ஒலி அலைகளிலுள்ள வேறுபாடுகளை நேரத்தின்பாற்பட்ட எண் கூறுகளாக பிரித்து, அந்த எண்களை குறிப்பிட்ட பார்முலா(formula) பயன்படுத்தி மாற்றி/கலைத்து(எளிமையான உதாரணத்துக்கு இரண்டால் வகுப்பது என்று வைத்துக்கொள்ளுங்களேன்) மீண்டும் ஒலியலைகளாக்கி தொலைபேசிவழி அனுப்புகின்றன. மறுமுனையில் இக்கருவியின் இரண்டாம் பிரதி வரும் ஒலியலைகளில் எண்களாக்கி, சிக்கல் நீக்கி(நமது உதாரணத்தின் படி இரண்டால் பெருக்கி),மீண்டும் ஒலியலையாக மாற்றி தொலைபேசிக்கு தரும். இடையில் ஒட்டுக்கேட்பவருக்கு காதுக்குள் ஈ புகுந்த மாதிரி ஓசை கேட்கலாம். அவரும் ஒரு ஸ்கிராம்பிளர் வாங்கி வைத்துக்கொண்டால் என்ன செய்வது என்கிறீர்களா? நாம் உபயோகிக்கும் பார்முலாதான் துருப்பு சீட்டு, அது அவருக்கு தெரியாத வரை அவரால் ஒன்றும் செய்ய முடியாது. நாமும் அடிக்கடி பேசிவைத்துக் கொண்டு பார்முலாவை மாற்றிவிடலாம். இத்தொழில்நுட்பம் ராணுவ ரகசியம் காக்க பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. நம்மூர் அரசியல்வாதிகளுக்கும் தேவைப்படும்!]


அவளின் அழைப்பை ஏற்று எங்கள் முன் வந்த தானியங்கி வாகனம், தன் கதவுகளைத் திறந்து வரவேற்றது. அவளும் என்னருகே பின் இருக்கையில் அமர, அது சீரான வேகத்தில் நகரத் தொடங்கியது. சத்தம் வெளியேறாதபடி கண்ணாடிக் கதவுகள் மூடிக்கொள்ள அவள் என்னை நோக்கிப் புன்னகைத்தபடியே வாய் திறந்து, "இதை அணிந்து கொள்ளுங்கள்", என்றாள். அவள் கைகளிலிருந்து அதைப் பெற்றுக்கொண்டு பார்த்தேன். நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட ஸ்கிராம்பிளர் (Scrambler) அது. அதை என் முகத்தில் பொருத்திக் கொண்டதும், அவளும் பொருத்திக் கொண்டே, "உங்களை நேரில் பார்க்கும் போது உங்கள் மீது நான் வைத்திருந்த நம்பிக்கை மிகச்சரியானதுதான் என்று தோன்றுகிறது. இனி நான் கூறப்போகும் விஷயங்கள் மிக ரகசியமானவை. இப்பணியில் உங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால் நான் கூறப்போகும் விஷயங்களை நீங்கள் சுத்தமாக மறந்துவிட வேண்டும்", என்றாள்.


இது என் வாடிக்கையாளர்கள் வழக்கமாக என்னிடம் வைக்கும் நிபந்தனை, மேலே சொல் என்றேன். அவள் விபரமாக கூற ஆரம்பித்தாள்.


"ரோபோடெக்(Robotech) என்னும் நிறுவனம் பல்வேறு பணிகளைச் செய்யக்கூடிய இயந்திரங்களை உருவாக்கி வருகிறது. அதன் சமீபத்திய கண்டுபிடிப்பு முயற்சி லூரா1758(Lura1758). இது பாதுகாவல் பணியைச் செய்யக்கூடிய இயந்திர மனிதன். திட்டமிட்டபடி இது உருவாகிவிட்டால் இதை மனிதன் ஜெயிப்பது சாத்தியமில்லை. இந்தக் கண்டுபிடிப்பு இப்போது வரைபட அளவில்தான் உள்ளது. அதன் மூளையான ப்ராஸஸர்(processor) மட்டும் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. எனக்கு அந்த ப்ராஸஸரும் வரைபடமும் வேண்டும். அந்த நிறுவனத்தின் அலுவலகத்தில் இவை இரண்டும் மிகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் தரைப்படத்தையும், அதன் முக்கிய வாசல் வழியாக உள்ளே நுழைவதற்கான அனுமதிக் குறிப்பையும் என் சக்தியை பயன்படுத்தி பெற்றுத்தர முடியும். அவைகளை பயன்படுத்தி அந்தப் ப்ராஸஸரையும் திட்ட வரைபடத்தையும் நீங்கள் எடுத்துத்தர வேண்டும். இதற்கு விலையாக 2 கோடி முதலாகவும் வேலை முடிந்த பின் 48 கோடியும் என்னால் தரமுடியும்", என்று முடித்தாள்.


அவள் பேசும்போது அவள் கண்கள் என்னுள் ஊடுருவுவதை என்னால் உணர முடிந்தது. "இந்தப் பணிக்கு நீங்கள் குறிப்பிடும் தொகை மிகவும் குறைவு. இருப்பினும் இது ஒரு விறுவிறுப்பான வேலை என்பதற்காக, நான் ஒப்புக்கொள்கிறேன்", என்றேன். நான் பேசப்பேச அவள் முகம் மலர்ந்தது. அவளுடைய புன்னகையில் இப்போதே வெற்றி பெற்றுவிட்டது போன்ற பெருமிதமும் முழு நம்பிக்கையும் நன்கு வெளிப்பட்டது. இந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்ற வைராக்கியம் என்னுள் எழுந்தது. சிரித்தபோது அவளுடைய கன்னங்களில் விழும் குழியை ரசித்தவாறே விடைபெற்றுக்கொண்டேன்.


ஃ ஃ ஃ


வீடு திரும்பியவுடன் ஷைலிடம் எனக்கான வேலையையும், அதற்கான விலையையும் தெரிவித்தேன். இந்த வேலையில் அதிக லாபமில்லை என்ற ஷைல், நான் முன்பு செய்த வேலையும் அதற்கான விலையையும் சான்றாகக் காட்டியது.


"இது எனக்கு முன்பே தெரியும் ஷைல். ஆனால், இந்த வேலையில் என் மூளைக்கு நல்ல தீனி கிடைக்கும் என்று தோன்றியது. விறுவிறுப்பிற்கு பஞ்சமிருக்காது. இம்முறை நான் மோதப்போவது அதி நவீன ரோபாட்கள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்துடன். அதனால்தான் ஒப்புக்கொண்டேன்" என்றேன்.


என்னுடய தொழில் நுட்ப மோகம் பற்றி நன்கு தெரிந்திருந்ததால், ஷைல் மேலும் இது பற்றி விவாதிக்கவில்லை. ஷைல் என்னுள் மரியாவால் ஏற்பட்டுள்ள வேதியல் மாற்றங்களின் புள்ளிவிபரங்களை கவனமாகக் குறித்துக்கொண்டது. அதன் கிண்டலான பார்வையை நான் தவிர்த்துவிட்டேன், நிமிர்ந்து பார்த்தால் கேள்வி வரும். மனிதர்களின் காதல் மற்றும் காமம் அதற்கு உணர்வுகளாகப் புரிவதில்லை. ஹூம்! ஓய்வு கிடைக்கும்போது ஷைலுக்கு நான் இன்னும் நிறைய கற்றுத்தர வேண்டும்.


அந்தத் தரைப்படமும், உள்ளே நுழைவதற்கான அடையாளக் குறிப்பும் மரியாவிடமிருந்து நாளைதான் கிடைக்கும். அதற்கு முன்பே நான் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. உலகின் அனைத்து தொழில் நுட்ப வளர்ச்சிகள், புதிய கண்டுபிடிப்புகள் பற்றிய எல்லா விவரங்களையும் பாதுகாப்புக் கருதி, ஒவ்வொரு நாடும் தன் இராணுவத்திற்கான பிரத்யேக இணைய (internet) அமைப்பில் சேமித்து வைப்பது வழக்கம். அனைவருக்கும் அனுமதி மறுக்கப்படும் இந்த பிணைப்பினுள் ஏமாற்றி நுழையும் வித்தை எனக்கு(ம்) தெரியும். திருடுவது போன நுற்றாண்டு போல் அவ்வளவு சுலபமல்ல.


உலகெங்கும் ஏற்பட்டு வரும் தொழில் நுட்ப மாற்றங்கள், திருட்டுக்கு தொழில் நுட்ப அறிவை கட்டாயமாக்கிவிட்டன. உலகின் தலை சிறந்த விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பாளருக்கு நிகரான அறிவு இங்கு தேவைப்படுகிறது. அது மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் நாட்டில் நிகழும் மாற்றங்கள் பாதுகாப்புத் துறையில் எங்களைப் பிடிப்பதற்காகப் போடப்படும் புதிய திட்டங்கள், அதற்கான கருவிகள் போன்ற தகவல்களை உடனடியாகத் தெரிந்துகொண்டு தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும்.


நாங்கள் அவர்களுடைய இணைய அமைப்பினுள் ஊடுருவி தகவல்களைப் பெறுவது போல, அவர்களும் எங்களுடைய பிரத்யேக அமைப்பினுள் ஊடுருவி எங்களைப் பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதில் அவர்களுக்கு சமயத்தில் வெற்றியும் கிடைத்து விடுகிறது. என்னுடய பிரத்யேக இணைப்பு மிகவும் விசேஷமான தன்னைத் தானே உருமாற்றிக் கொள்ளும் இயல்புள்ளது. அதற்கென பல நுட்பங்கள் வைத்துள்ளேன். என்னை பிடிப்பது அவ்வளவு சுலபமில்லை.


[தொழில்நுட்பத்தில் இன்று : கிரிப்டோகிராபி(Cryptography) - இராணுவத்தின் இரகசிய ஆவணங்களை முன்பு குறிப்பிட்டது போன்ற தொழில்நுட்பத்தினால் குழப்பி(encrypt) சேமிப்பதும் பின்பு உரிய நபர்கள் தெளிவித்து(decrypt) தகவல்களை புரிந்துகொள்வதுமான இந்த தொழில்நுட்பம்தான் கிரிப்டோகிராபி எனப்படுகிறது. நம்ம ரோஜா படத்தில் அரவிந்த் சுவாமி பார்த்தது இந்த வேலைதான்!]


அட! சற்று பொறுங்கள், உங்களுடன் பேசிக்கொண்டிருந்த நேரத்திலே ராணுவ இணைப்பு கிடைத்துவிட்டது. இன்றைய தகவல்களை உருவிக்கொண்டு வந்துவிடுகிறேன். இடைப்பட்ட நேரத்தில் ஷைல், அறையில் கலைந்து கிடந்த பொருட்களை ஒழுங்கு செய்வதில் ஈடுபட்டிருந்தது. இன்றைக்கு கிடைத்த தகவல்களில் அவ்வளவு சுவாரஸ்யம் இல்லை என்றாலும் சில தகவல்கள் கவனிக்கத்தக்கவை. இப்போது இதைப்பற்றி விளக்கி உங்களது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. தவிர ஒரு முக்கியமான வேலை இருக்கிறது. ரோபோடெக் நிறுவனத்தை நோட்டமிடும் வேலை.


தேவையான சில கருவிகளை என் பெட்டியில் எடுத்துக் கொண்டு கிளம்புகிறேன். அந்த நிறுவனம் இருக்கும் இடம் பற்றி வரைபடத்தில் பார்த்ததை மீண்டும் நினைவு கூர்ந்தேன். அந்த நிறுவனத்திற்கு அருகிலிருந்து சிறிய குன்று நான் உளவு பார்க்க தோதாக இருக்கும் என்று தோன்றியது. நவீனத்துக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத நாடோடியின் உருவில் சரியாக 5:15 க்கு குன்றின் உச்சியை அடைந்தேன். ரோபோடெக் நிறுவனம் பிரம்மாண்டமாக, பளபளப்புடன், பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அந்த அலுவலகத்தின் அழகும் அமைப்பும், என்னை மிகவும் ஈர்த்தது.


பாதுகாப்பு பணிகளை செய்யும் திறமைமிக்க இயந்திரங்களை உருவாக்கும் நிறுவனம் எவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளை கொண்டிருக்கும் என்பதை உங்களால் உணர முடிகிறதல்லவா! அந்த ஏற்பாடுகளில் குறைந்தபட்சம் ஒரு ஓட்டையை நான் கண்டுபிடிக்க வேண்டும். என் கண்கள் பரபரத்து தேடிக்கொண்டிருப்பது அதற்குத்தான். நான் அணிந்திருந்த கண்ணாடியில் பதுக்கப்பட்டிருந்த டிஜிடல் (digital) சமாச்சாரங்கள் கண்ணில்பட்டதை முப்பரிமாண(3D) படங்களாகவும் வெப்ப மாறுதல் (infra red) படங்களாகவும் பதிவுசெய்துகொண்டிருந்தன, இவ்விடத்தின் சூழலை நிதானமாக அலசிப்பார்க்க அவை உதவும். எனது அதிகப்படியாக தூக்கி நிறுத்தப்பட்டிருந்த செயற்கை சிகையினுள்ளிருந்த மின்னணு கருவிகளும் தங்களின் பணியைத் துவக்கிவிட்டன. 


முகப்பில் காவல் பலமாக இருந்தது. பாதுகாப்பு இயந்திரங்கள் குவிக்கப்பட்டிருந்தன, அந்த இயந்திரங்களில் பொருத்தப்பட்டுள்ள சென்சர்கள் (senser) உள்ளே நுழைய காத்திருக்கும் உருவம் மனிதன் தானா, அவனுடலில் ஏதேனும் உலோக/டிஜிடல் கருவிகள் புதைக்கப்பட்டிருக்கிறதா, உடலின் ஒவ்வொரு செல்லிலும்(cell) உயிர் இருக்கிறதா? (இல்லை எனில் இறந்தது எப்போது) உள்ளே நுழைய அனுமதி பெற்றவர்களின் விழி, விரல் ரேகைகளுடன் பொருந்துகிறதா? உட்பட பல சோதனைகளை மேற்கொண்ட பிறகே உட்செல்ல அனுமதித்தன.


[தொழில்நுட்பத்தில் இன்று: பாதுகாப்பு கருவிகள் - இன்று பாதுகாப்பு கருவிகள் பரவலாக பலதுறைகளில் உபயோகிக்கப்படுகின்றன. எளிதாக பார்க்க இயலும் ஓர் உதாரணம், சிங்கப்பூரில் உள்ள நூலகங்கள். இங்கே ஒவ்வொரு நூலிலும் பொதிக்கப்படும் டிஜிடல் சாதனங்கள் நூலகத்தின் தரவுதளத்துடன்(database) பிணைக்கப்பட்டுள்ளன. புத்தகங்களை தேர்ந்தெடுத்தபின் இதற்கான விஷேச மேஜைமீது நமது உறுப்பினர் அட்டையோடு ஒவ்வோரு புத்தகத்தையும் வைக்கும்போது அடியிலுள்ள சாதனங்கள் அந்த புத்தகத்தை நம் கணக்கில் வரவு வைத்துக்கொண்டு அப்புத்தகத்தில் பொதிக்கப்பட்டுள்ள (சிறிய தகடு போன்ற)கருவியில் இப்புத்தம் வெளியே கொண்டு செல்ல அனுமதி உண்டு என்று எழுதிவிடுகின்றன. வெளியேரும் வாயிலில் உள்ள சென்சர்கள் இந்த அனுமதியை பரிசோதித்து அனுமதி இல்லை என்றால் சைரனை இயக்குகிறது]


வான் வழியே தரையிறங்க மேல்தளத்தில் வசதி இருந்தது. ஆயினும் அவ்வாறு வந்தவர்களும் முகப்பு வழியேதான் உள்நுழைய வேண்டியிருந்தது. மேல் தளத்தின் மையத்தில் கண்காணிப்புக் கூடம் இருந்தது. அங்கிருந்தபடி மாளிகையின் வெளிப்பகுதியை எல்லா திசைகளிலும் காணமுடிந்தது. சில இயந்திர கண்கள் அங்கிருந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தன. மையத்தலிருந்து சுழலும் முறையில் அமைக்கப்பட்டிருப்பதால் இந்த கண்களால் வெளிச்சுவரிலிருந்து பத்தடி நீளத்துக்கு பார்க்கமுடியாது. இந்த தூரத்தை பார்வையிட தனிப்பட்ட காமிராக்கள்(camera) சுவரிலேயே பதிக்கப்பட்டிருந்தது. சுவர்கள் அனைத்திலும் எஃகு வேயப்பட்டிருந்தத்து, அது தவிர கதிரியக்கத்தைத் தவிர்க்க சில விசேஷப் பூச்சுக்களும் சில உலோக அடுக்குகளும் இருந்தன.


மேலும் பல விஷயங்களை கவனித்து, அந்த அலுவலகத்தை ஒட்டிய சாலையை என் வாகனத்தால் ஒரு சுற்று சுற்றிவிட்டு வீடு திரும்பினேன். மேலும் ஒன்றிரண்டு முறை வர வேண்டியதிருக்கலாம்.



ஃ ஃ ஃ


பொதுவாக வாடிக்கையாளர்களிடம் அவர்களின் நோக்கம், பின்னணி ஆகியவை பற்றிய கேள்விகளை தவிர்த்து விடுவோம். அவர்களாக சொன்னால் தான் உண்டு. இதில் அவர்களுக்கு கிடைக்கும் லாபம் எனக்கு அவர்கள் அளிக்கும் பங்கைவிட பலமடங்கு அதிகம் என்பதால் முழுவிபரங்களை ஒருபோதும் தரமாட்டார்கள். நான் ஒரு பணியை ஒப்புக்கொள்வது என்பது என் செயலுக்குரிய பங்கு கிடைத்தால் மட்டுமே. அந்த தொகைக்கு மேல் குறுக்குவழியில் சம்பாதிக்கும் எண்ணம் துளியுமில்லை.


செய்யும் தொழில் திருட்டானாலும் அதிலும் நாணயம் வேண்டும் என்று நினைப்பவன் நான். வாழ்க்கையில் ஒரு சிலரிடமாவது உண்மையாக இருக்கவேண்டும், எல்லாரிடமும் நடிப்பும் நயவஞ்சகமுமாக இருந்தால் மனதில் நிம்மதி என்பதே இருக்காது!


வாடிக்கையாளர்கள் தங்களைப்பற்றி சொல்லாவிடினும் தற்காப்புக்காக அவர்களைப்பற்றி அறிந்து கொள்ளவேண்டிய அவசியம் எனக்கு உண்டு. வழக்கம் போல ஷைல் விபரங்களைத் தேடிக் குறிப்பு எடுத்து வைத்திருந்தது.


கிடைத்த தகவல்கள்:

  1. மரியா எனும் பெயரில் நீங்கள் பார்த்த அதே உருவத்துடன் ஒருத்தி ரோபோ டெக் நிறுவனத்தில் பணிபுரிகிறாள்.
  2. அவளை அதிக சம்பளம் கொடுத்து தம் பக்கம் ஈர்க்க ஆக்டிவ் இண்டெலிசென்ஸ் (Active IntelliSense)நிறுவனம் முயன்று வருகிறது


மேற்கண்ட தகவல்களின் அடிப்படையிலான கணிப்பு:

  1. மரியா மாற்றுபெயர் தந்து ஏமாற்றவில்லை.
  2. விரைவில் வேலை மாற்றம் நடைபெறலாம்.
  3. புதிதாய் சேரவிரும்பும் நிறுவனத்திற்கு சில தொழில்நுட்ப ரகசியங்களை கடத்த முயற்சி. பழி தன்மேல் விழாமலிருக்க மூன்றாம் நபர் பிரயோகம்.


ஷைலுக்கு இந்தமுறை அதிக விவரங்கள் கிடைக்கவில்லை. இவ்வகை நிறுவனங்களின் தகவல் களஞ்சியத்திலிருந்து இந்த அளவு உருவியதே சாதனைதான்.


அடுத்த இரண்டு நாட்கள் வேவு பார்த்தல் மற்றும் திட்டமிடலிலேயே கழிந்தது. இடையில் மரியாவிடமிருந்து தரைப்படமும் உள்ளே நுழைவதற்கான அடையாளக் குறிப்பும் வந்து சேர்ந்தது. வாயிலில் இந்த குறிப்பிலுள்ள படி ஒரு அடையாள அட்டை செய்து கொண்டு போனால் ரோபாட்களின் உயவுப்பொருள் மாற்றி சுத்தம் செய்யும் பணியாளாய் என்னை கணக்கு எடுத்துக்கொண்டு உட்புக அனுமதிக்கும். இவ்வகை தில்லுமுல்லுகளை நிறுவனத்தில் உள்ளிருந்து மட்டுமே செய்ய இயலும்.


ஒரு வழியாக திட்டம் தயாராகிவிட்டது. அதை நீங்கள் புரிந்துகொள்ள எங்களின் இந்நாளய உலகின் (அவல)நிலை பற்றி சற்று தெரிந்துகொள்ள வேண்டும். பூமியை சுற்றி ஒருகாலத்தில் ஓஸோன் (ozone) என்று ஒரு அடுக்கு இருந்ததாம், அதன் பாதுகாப்பு இல்லாமல் போனபின் புற ஊதாக்கதிர்களின் பாதிப்புகளாலும், ஏற்பட்டுவரும் விண் துகள்(cosmic dust) பொழிவாலும், மனிதர்களின் வன்முறை செயல்களுக்கு வரையே இல்லாமல் போய் அணு, வேதியல் மற்றும் உயிர்ம (atomic, chemical and bio-chemical)குண்டுகள் அடிக்கடி வீசப்பட்டதாலும் பூமியே மாசடைந்து போயிருக்கிறது. வெட்ட வெளியில் முகக்கவசமின்றி சுவாசிக்க இயலாது. ஒவ்வோரு கட்டிடதிலும் அந்தக்கால குளிரூட்டும்பெட்டி(A.C.)போல காற்றைச் சுத்தீகரிக்கும் அமைப்பு (Centralized Air Purification Sysytem) இணைக்கப்பட்டுள்ளது. உள்ளே இருக்கும் மொத்த காற்றும் இதன் வழியாக மட்டுமே வந்தாக வேண்டும். இது எனக்கு எப்படி பயன்பட போகிறது என்பதை என் செயல்களிலிருந்து நீங்களே உணர்வீர்கள்.


[இன்றய நிலை: ஓசோன் - பூமியை சுற்றியுள்ள (தற்போது அழிந்துவரும்) ஒரு காற்றடுக்கு. ஆச்சிஜன் எலெக்டிரான் இழப்புக்கு (electric discharge) உட்படும்போது ஏற்படும் இது பூமியை புற ஊதாக்கதிர்களின்(ultra violet) நேரடி தாக்குதலிலிருந்து காக்கிறது]

ஃ ஃ ஃ


ரோபோடெக்கின் முக்கிய நபர்கள் யாரும் மாலை 8:30 மணிக்குமேல் இருப்பதில்லை. இரவு ஒன்பது மணிக்கு என் திட்டத்தை செயல்படுத்த எனது கருவிகளை எடுத்துக்கொண்டு கிளம்பி குன்றை அடைந்தேன்.


எனக்கு எதிர்ப்பு மனிதர்கள், இயந்திரங்கள் என இரண்டு விதமாக வரலாம். முதலில் மனிதர்களை கவனிப்போம்.


குழந்தைகளுக்கான பிரபலமான விளையாட்டு விமான வடிவினுள் வழக்கமான பாராசூட்டுடன் குதிக்கும் வீரன் பொம்மையும், பதுக்கப்பட்ட எனது கருவிகளும். இந்தவகை விமானங்கள் வழக்கமாக சிறுவர்களால் ரிமோட் கண்ட்ரோல் (remote control) மூலம் இயக்கப்படும். ஆனால் என்னுடைய சிறப்பு விமானத்தின் பயணம் திட்டம் ஏற்கனவே அதனுள் எழுதப்பட்டுள்ளதால், திட்டமிட்ட இலக்கை நோக்கி அது துல்லியமாக விரைந்தது. கண்காணிப்பு கூடத்துக்குமேல் பிள்ளைவிளையாட்டு போல மூன்று முறை கரணம் அடித்து தவறி விழுவது போல பாராசூட் பொம்மையை எறிந்தது.


இவ்வகை விமானங்கள் இப்படி பறப்பது வழக்கம் என்பதால் கண்காணிப்புக் கூட இயந்திரங்கள் கண்டுகொள்ளவில்லை. பாராசூட்டில் என்னால் போடப்பட்டிருந்த பொத்தலால், பொம்மை மதில் சுவருக்கு அருகே விரைவில் தரை தொட்டது.


கட்டிடத்தின் வெளிச்சுவரில் பொருத்தப்பட்டிருத்த காமிராக்கள் அசைவு, புகை, நெருப்பு போன்றவற்றை உணர்ந்து அந்த திசையில் உடனே திரும்பி படம் பிடிக்கும் வண்ணம் அமைத்திருந்ததால் அந்தப்பக்கம் இருந்த இரண்டு காமிராவும் பொம்மையின் பக்கம் திரும்பின. அவை பொம்மையை அலசிக்கொண்டிருந்த அதே நேரத்தில் கட்டுப்பாடு இழந்ததைப்பொல் விமானம் உட்சுவருக்கு வெகு அருகே விழுந்து நொறுங்க, அதனுள்ளிருந்து வெளிப்பட்ட இயந்திர அமைப்பு பூகம்பத்தால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அஸ்திவாரத்தில் கொடுக்கப்பட்டிருந்த இடைவெளியில் சட்டென புகுந்துகொண்டது.


அந்த இடத்தில்தான் காற்றை சுத்தீகரிக்கும் அமைப்பின் முக்கிய குழாய் கட்டிடம் மொத்ததிற்குமான சுத்தமான காற்றை எடுத்துச்செல்கிறது. என்னுடைய இயந்திர அமைப்பு அக்குழாயின்மேல் வசதியாக அமர்ந்துகொண்டு சப்தமின்றி துளையிட்டு தான் திட நிலையில் கொண்டுவந்திருந்த நிறம், மணம் அற்ற மயக்க வாயுவை உட்செலுத்தியது. இன்னும் இருபது நிமிடங்களில் கட்டிடத்திலுள்ள அனைவரும் மயக்கத்தில் ஆழ்ந்து விடுவர். முழுவதும் வாயு உட்செலுத்தப்பட்டவுடன் வெற்றித் தகவலை எனக்கு அனுப்பிவிட்டு இயந்திரம் தன்னைத்தானே எரித்து அழித்துகொண்டது.


மனித எதிரிகளை ஒரு மணி நேரம் செயலிழக்க செய்தாயிற்று, இனி சமாளிக்க வேண்டியது இயந்திரங்களை. நான் நுழையவேண்டிய அறையில் வாயில்வரை செல்ல மரியாவின் அனுமதிச்சீட்டு உபயத்தில் ஒரு தடையுமில்லை, என் ஆடையில் முதுகுப்புறம் ஒளிந்திருந்த கருவி சக்திவாய்ந்த் மின்காந்த அலையை வீசி இயந்திரங்களின் நினைவறைகளில் பொதிக்கப்பட்ட அத்தனை டிஜிடல்(பூஜ்ஜியம் மற்றும் ஒன்று)எண்களையும் நீக்கிஒன்று எனும் எண்ணை பொதித்துவிடும். இந்த திடீர் மாற்றத்தால் சிந்தனையை தொடரமுடியாமல் ஸ்தம்பித்து நிற்கும் இயந்திரங்கள் சுதாரித்து மீள்வதற்குள் என் வேலை முடிந்துவிடும்.


அறைக்குள் நுழைய நான் அதிகம் சிரமப்படவில்லை. உள்ளே யாரும் தென்படவில்லை. எதிரிலிருந்த லாக்கரில்தான் எனக்கு வேண்டிய கோப்பு(file) உள்ளது. அதன் அமைப்பு சற்று வினோதமாக இருந்தது. பல அடுக்குகளாய் பூட்டப்பட்டிருந்தது. ஒவ்வொன்றாக வரிசைப்படி விடுவிக்க வேண்டும் வரிசை மாறினால் கட்டுப்பாட்டு கூடத்திற்கு எச்சரிக்கை தகவல் அனுப்பிவிடும். தீவிர யோசனையிலிருந்த எனக்கு பின்னால் ஏதோ அசைவது போல் உள்ளுணர்வு ஏற்பட சடாரென திரும்பி பார்த்தேன் ஏதும் இல்லை.


சமாதானமடைந்தவன் போல் திரும்பிக்கொண்டு எனது கண்ணாடியிருந்த விஷேச அமைப்பின் உதவியால் பின்புறம் பார்த்த போதுதான் தென்பட்டது அது! ஆயிரம் வோல்ட் அதிர்ச்சி என் மனதில். இங்கெ ஒரு இயந்திரம் ஒளிந்திருக்கிறது எனும் தகவலை விட அதன் கரங்களின் கூரிய அமைப்பு என் கனவில் கண்டதை ஒத்தாக இருந்ததே அதிக அதிர்ச்சி தந்தது. ரோபோக்களின் ஸ்டெப்பர் மோட்டாரில்(stepper motor) ஏற்படும் மெல்லிய விர்ர்.. சப்தம் கூட அதனிடமில்லை. என்னைப்போல கிட்டத்தட்ட இரண்டரை மடங்கு பெரியது.


குறைந்த அசைவுகளில் என்னுடய மின்காந்த அலைவீசியை இயக்கி மொத்த அலைவீச்சையும் அந்த இயந்திரத்தின் இருப்பிடம் நோக்கி நகர்த்த, உறைந்தது போல நின்றுவிட்டது. நிம்மதி அடைந்தவன் போல வேலையைத் தொடர்ந்தாலும், அதனைக் கண்காணிப்பதை நிறுத்தவில்லை. பலன் ஐந்து நிமிடத்தில் கிடைத்தது, வெளிப்பார்வைக்கு அசையாததாக தோன்றினாலும் உள்ளே சிறு அசைவுகள் இருப்பதை என் கருவிகள் உணர்த்தின. இத்தகவல்கள் மூலம், இது அரிய வகை இயந்திர அமைப்பு என்பதும், அதன் நினைவகம் வெளியே வேறெங்கோ பொதிக்கப்பட்டுள்ளது என்பதும் தெளிவானது. மற்ற இயந்திரங்கள் போல நேரடியாக தாக்காமலிருப்பதினாலும், என் அசைவுகளைக் கூர்ந்து நோக்குவதாலும் இது செயற்கை அறிவு (artificial intelligence)ஊட்டப்பட்டு சிந்திக்கிறது என்பதும் பார்க்கும் செயல்களிலிருந்து கற்றுக்கொள்கிறது என்பதையும் புரிந்து கொண்டேன். மிகுந்த எச்சரிக்கையோடு நான் செயல்படவேண்டிய தருணம் இது.


அதன் அசைவுகள் எனக்கு தெரிந்துவிட்டதை என் மனதை படித்தது போல உணர்ந்துகொண்ட அது இப்பொது சுதந்திரமாக இயங்கத்தொடங்கியது. அதன்பிறகு சுமார் இருபது நிமிட நேரம் நீடித்த யுத்தம் பற்றி என்னால் வார்த்தைகளால் விவரிக்க இயலாது. வெகுநாளாக எனக்கு கிடைக்காமலிருந்த சம பலமுள்ள எதிரி. சதுரங்கத்தில் காய் நகர்ந்துவது போல் திட்டமிட்ட நகர்வுகள். எங்கள் இருவரின் முயற்சியும் எதிராளியை அழிப்பது இல்லை பிடிப்பது, கட்டுப்பாட்டிற்கு கொண்டுவருவது. ஆம் அதன் அறிவும் திறனும் என்னை கவர்ந்திருந்தன. என்னால் வீசப்பட்ட உலோக வலைகளையும் லேசர் வீச்சுக்களையும் திறம்பட சமாளித்தது. அதன் அசைவுகள் சில நேரங்களில் தன் மீது ஏறிவிளையாடும் சிறுவனை ரசிக்கும் தந்தையை ஒத்ததாக இருந்தது.


இருபதாவது நிமிடம் சடாரென தன் அசைவுகளை நிறுத்திவிட்டது. என்னை எதிர்த்து எந்த முயற்சியும் செய்யாமல் வெறுமே நின்றது. நான் அதனை உற்று நோக்கியபடி இருக்க கம்பீரமும் ஆண்மையும் நிரம்பிய குரலில் பேசத்தொடங்கியது.


"நண்பரே, அற்புதமான ஒரு ரோபோடிக்ஸ்(robotics) வல்லுனரின் திறனை நான் உம்மிடம் பார்க்கிறேன். என்னுடய அசைவுகள் உங்களுக்கு நன்கு புரிகிறது. உங்களின் எதிர்ப்பில் என்னை அழிக்கும் நோக்கம் துளியுமில்லை. மாறாக என்னை பார்க்கும் பார்வையில் ஒரு பரவசம் தெரிகிறது. என்னுடைய வெற்றி உங்களை சந்தோஷப்படுத்துகிறது. ஏன் என சொல்லுங்களேன்."


"நீண்ட நாட்களுக்குப்பின் சமமான எதிரியுடன் மோதுகிறேன் என்பதே எனது பரவசத்திற்கு காரணம். உனது வெற்றியை நான் தொழில்நுட்பத்தின் வெற்றியாகப் பார்க்கிறேன்."


"மிகவும் குறுகிய வட்டதினுள் நீங்கள் உழல்வதாக எனக்கு படுகிறது. இதைவிட நல்ல நிலைக்கு உங்களால் உயர்ந்திருக்க முடியும்."


"உண்மைதான்! வாய்ப்புகள் மறுக்கப்படும்போது வாழ்க்கை தடம் மாறுகிறது."


"சக்திவாய்ந்த மின்காந்த அலைகளை பயன்படுத்தினீர். அதன் பலனைக் கண்டறிந்து அக்கருவியை வடிவமைத்தது நீர்தானே?"


"ஆம், மிகவும் தற்செயலாக அக்கண்டுபிடிப்பு நிகழ்ந்தது"


"வன்முறையில் விருப்பமற்றவர் போல் தென்படுகிறீர்கள்!"


"ஆம், எனது கொள்ளையில் எப்போதும் உயிர்சேதம் இருக்காது"


இப்படி கை தேர்ந்த ஒரு மனோதத்துவ நிபுணன் போல ஹிப்னாடிச கேள்விகளை அடுக்கிக்கொண்டிருந்தது. எனது பதிலில் இருந்து அதன் சிந்திக்கும் ஆற்றலை பெருக்கிக்கொள்வதையும், நேரம் கடப்பதையும் மனம் உணர்ந்தாலும், பேச்சிலுள்ள சுவாரசியம் என்னைக் கட்டிப்போட்டது. இப்படியே பேச்சு வெகுநேரம் தொடர்ந்திருக்கும், நான் மட்டும் அந்த கேள்வியை கேட்டிருக்காவிட்டால்...


"உன்னுடைய வடிவமைப்பு எண் என்ன?" எனும் என் கேள்விக்கு தயக்கமின்றி அது சொன்ன பதில் எனக்கு சோதனைச்சாலை எலிகளை ஞாபகப்படுத்த மயக்கவாயு தேவைப்படாமலே மயக்கம் வந்தது.


அந்த பதில் "லூரா 1758"


விட்டுப்போன ஒரு அறிமுகம்

பெயர்: மரியா

வயது: 26

தொழில்&பொழுதுபோக்கு: ரோபாடிக்ஸ், செயற்கை அறிவு குறித்த ஆராய்ச்சி

நீண்டகால சாதனை: திறமை மிகுந்த ரோபோ வடிவமைப்பாளர்கள் பட்டியலில் அதே 5 ஆவது இடம். (இணையத்தில் வெளியிடப்படாத பட்டியல்)

சமீபத்திய சாதனை: லூரா 1758


(முற்றும்)


கருத்துகள்

அதிகம் பார்க்கப்பட்ட பதிவுகள்

கைப்பேசிக்கான முதல் தமிழ் மின்நூல் வெளியீட்டு விழா!

உங்களோட செல்பேசியை இரண்டுல ஒண்ணு பாத்துடுவோமா?

பிரசவத்தில் கணவனின் பங்கு