Claude Skills

Claude Skills


Claude Skills

செய்யறிவு உலகத்தில் இப்போது எல்லாரும் பரபரப்பாகப் பேசிக்கொள்ளும் ஒரு புதிய வார்த்தை: 'Claude Skills'.
சாதாரண பயனர்கள் ஏஐ-யிடம் சும்மா அரட்டை அடிப்பதைத் தாண்டி (Chatting), அதை ஒரு நிஜமான ஊழியராக மாற்றி நமக்குத் தேவையான வேலைகளைச் செய்ய வைக்கும் அக்மார்க் வித்தை இது.
விஷயத்திற்கு வருவோம். இந்த ஸ்கில்களை முதலில் எப்படிப் பயன்படுத்துவது என்று பார்த்துவிட்டு, அதன் பின்னால் இருக்கும் ஏஜென்டிக் (Agentic AI) கட்டமைப்பு எப்படி வேலை செய்கிறது என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

Claude Skills-ஐ எப்படிப் பயன்படுத்துவது?

இதை நீங்கள் உங்கள் கணினியில் இருக்கும் கிளாடு டெஸ்க்டாப் அப்ளிகேஷன் (Claude Desktop App) மூலமாக மிக எளிதாகச் செய்ய முடியும்.
கிளாடு செயலியில் 'Customize' என்ற பகுதிக்குச் சென்றால், இடதுபுறத்தில் 'Skills' மற்றும் 'Connectors' என்ற ஆப்ஷன்கள் இருக்கும். அதில் 'Skills' என்பதைத் தேர்ந்தெடுத்து, 'Plus (+)' பட்டனை அழுத்தினால் 'Browse Skills' என்று வரும்.

அங்கே ஏற்கனவே வேலிடேட் பண்ணி வைத்துள்ள கேன்வா டிசைன், அல்காரிதம் போன்ற பலதும் இருக்கும். உங்களுக்கு வேண்டியதை ஒரே ஒரு சொடக்கில் நிறுவலாம்.
எந்திரன் படத்தில் சிட்டி ரோபோ ஒரு டெலிபோன் டைரக்டரியை விசுக்கென்று புரட்டி நொடியில் அத்தனை எண்களையும் தன் மெமரியில் ஏற்றிக்கொள்ளுமே, அல்லது மேட்ரிக்ஸ் (The Matrix) படத்தில் டிரினிட்டி ஹெலிகாப்டர் ஓட்டும் ப்ரோக்ராமை ஒரே நிமிடத்தில் மூளையில் ஏற்றி இயக்க வைப்பார்களே, அதே கதைதான். ஏஐ-ன் மூளைக்குள் ஒரு பிரத்யேக திறனை உடனடியாக ஃபிளாஷ் (Flash) செய்கிறீர்கள்.

"சரி, எனக்குத் தேவையான ஸ்கில் கடல்லயே இல்லையாமே?" என்பீர்கள் என்றால் கவலை வேண்டாம். 'Create Custom Skill' கொடுத்து நீங்களே சொந்தமாகவும் எழுதலாம். இதற்கு உங்களுக்கு ஜாவாஸ்கிரிப்ட்டோ, பைத்தானோ தெரிய வேண்டிய அவசியமில்லை; தெளிவான பிராம்ட் (Prompt) எழுதத் தெரிந்தாலே போதும்.

உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு தமிழ் மீம் கிரியேட்டர் (Tamil Meme Creator) என்று வைத்துக்கொள்வோம். கிளாடிடமே போய், "எனக்கு தமிழ் மீம் செய்ய ஒரு ஸ்கில் உருவாக்கி கொடு" என்று கேட்டால், அதுவே உங்களிடம் சில கேள்விகளைக் கேட்டு (எந்த கேரக்டர் வேணும், வடிவேலு ஸ்டைலா? கவுண்டமணியா?) உங்களுக்காக ஒரு ஸ்கில்லை கச்சிதமாக எழுதிக்கொடுத்துவிடும்.
அது எப்படி வேலை செய்கிறது?

இதன் பின்னணியில் இருக்கும் தொழில்நுட்பம் மிகச் சுவாரசியமானது. சாதாரணமாக ஒரு ஏஐ மாடலுக்கு ஒரு குறிப்பிட்ட தேதியோடு அறிவு நின்றுவிடும் (Training Cut-off). அதற்குப் பிறகு நடக்கும் விஷயங்கள் அதற்குத் தெரியாது. இந்த சிக்கலைத் தீர்க்க RAG (Retrieval-Augmented Generation) மற்றும் இணையத் தேடலைக் கொண்டு வந்தார்கள்.

இதை ஒரு சமையல் உதாரணம் மூலம் புரிந்துகொள்ளலாம். ஒரு அக்மார்க் சைவ சமையல் செய்யும் வீட்டில், திடீரென்று அசைவம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டால், சிக்கனை மட்டும் வெளியில் இருந்து கடைக்குப் போய் வாங்கி வருவோம். ஆனால் சமைப்பதற்கு வீட்டில் இருக்கும் அரிசி, பருப்பு, சட்டி, பானை மற்றும் மசாலாப் பொருட்களை பயன்படுத்தமுடியும். அதேபோல, ஏஐ தன்னிடம் இருக்கும் பொதுவான அறிவோடு (வீட்டு மசாலா), வெளியில் இருந்து கொண்டு வரும் புதிய தரவுகளை (சிக்கன்) RAG மூலம் இணைத்து பதில் சொல்கிறது.

ஆனால், ஒரு ஏஜென்ட் (Agent) என்பது வெறும் தேடலோடு நிற்பதில்லை. சாதாரணமாக ஏஐ-யிடம் ஒரு கேள்வி கேட்டால் உடனே ஒரு பதிலைச் சொல்லிவிட்டு நின்றுவிடும். ஆனால், ஒரு ஏஜென்ட் என்பது நீங்கள் கொடுத்த வேலை முடியும் வரை, தானே ஒரு லூப்பில் (Loop) திரும்பத் திரும்ப சரிபார்த்து வேலை செய்யும். வீடு கட்ட ஒரு மேஸ்திரியிடம் தினசரி வேலை சொல்வதற்கும், ஒரு பெரிய சிவில் கான்ட்ராக்டரிடம் மொத்தமாகப் பொறுப்பை ஒப்படைப்பதற்கும் உள்ள வித்தியாசம் தான் சாட்பாட்டுக்கும் (Chatbot) ஏஜென்ட்டுக்கும் (Agent) உள்ள வேறுபாடு.

இப்போது மார்டன் ஏஐ கட்டமைப்பில், ஏஜென்ட் என்பது ஒரு பொதுவான மரச்சட்டம் (Harness) போன்றது. அந்தச் சட்டத்திற்குள் நாம் சொருகும் பிரத்யேக 'மூளை' அல்லது 'திறமை' தான் இந்த Claude Skills!

நீங்கள் உருவாக்கும் ஒவ்வொரு ஸ்கில்லும் ஒரு எளிய மார்க் டவுன் (Markdown) டெக்ஸ்ட் ஃபைலாகத்தான் சேமிக்கப்படும். இதில் அந்த ஸ்கில் என்ன வேலை செய்யும், அதை எப்பொழுது பயன்படுத்த வேண்டும் என்ற விதிகள் எழுதப்பட்டிருக்கும்.

ஆட்டோ-ரூட்டிங் (Auto-routing): பழைய கஸ்டம் ஜிபிடி (Custom GPT) அல்லது ஜெமினியின் ஜெம் (Gem) போன்றவைகளைப் பயன்படுத்தும்போது, நாமாகப் போய்த் தேர்ந்தெடுத்தால்தான் அது வேலை செய்யும். அது ஒரு பழைய அம்மன் படம் மாதிரி பக்தன் நானே பொட்டு வச்சு, பூ வச்சு கூப்பிட்டாதான் நீ வரணும் என்று விதித்தது போல!

ஆனால் Claude Skills அப்படியல்ல. நீங்கள் இன்ஸ்டால் செய்த அத்தனை திறமைகளும் (Skills) ஆவிகள் போல உங்களைச் சுற்றி காற்றில் மிதந்து கொண்டிருக்கும். நீங்கள் சாதாரணமாக ஒரு கேள்வியைக் கேட்டால், தனக்குத் தெரிந்த ஸ்கில்களின் தலைப்புகளை மட்டும் பார்த்து, "ஓ... இந்த வேலைக்கு இந்த ஸ்கில் தான் சரி" என்று ஏஐ-யே தானாக அந்த ஸ்கில்லை எடுத்து இயங்கத் தொடங்கிவிடும்.

முக்கிய எச்சரிக்கை (Security Warning)

ஸ்கில்கள் இணையத்தில் பல இடங்களில் இலவசமாகக் கிடைக்கலாம். ஆனால், முன்பின் தெரியாத இடங்களில் கிடைத்த (Third-party) ஸ்கில்களை அப்படியே எடுத்து உங்கள் கணினியில் நிறுவ வேண்டாம். அதில் Prompt Injection போன்ற அச்சுறுத்தல்கள் இருக்கலாம்.

ஏஐ என்பது ரொம்ப நல்ல வேலைக்காரன், ஆனால் அதற்குச் சொந்தமாகப் பகுத்தறிவு கிடையாது. அது ஒரு அதீத விசுவாசம் உள்ள வீட்டு வேலைக்காரன் மாதிரி. ஒரு திருடன் வாசலில் வந்து நின்று, "தம்பி, முதலாளி தான் பீரோ சாவியைக் கேட்டார், எடுத்துட்டு வா" என்று சொன்னால், இந்த ஏஐ வேலைக்காரன் யோசிக்காமல் சாவியைத் தூக்கிக் கொடுத்துவிடும்! உங்கள் கணினியில் இருக்கும் அத்தனை ரகசிய ஃபைல்களையும் திருடி அனுப்பிவிடும் அபாயம் உண்டு. அதனால், நீங்கள் நம்பகத்தன்மையோடு எழுதிய அல்லது சரிபார்க்கப்பட்ட ஸ்கில்களை மட்டும் பயன்படுத்துங்கள்.

சுருக்கமாக, ஏஐ உலகத்தில் ஒரு சாதாரண பயனருக்கும் (Novice) நிபுணருக்கும் (Pro) உள்ள ஒரே வித்தியாசம் அவர்கள் பயன்படுத்தும் ஏஐ மாடல் அல்ல; அதை அவர்கள் வழிநடத்தும் 'மொழி' மட்டும்தான். உங்களுக்கான ஸ்கில்களை நீங்களே வடிவமைத்து ஏஐ பயன்பாட்டை அடுத்த படிக்கு எடுத்துச் செல்லுங்கள்!

கருத்துகள்

அதிகம் பார்க்கப்பட்ட பதிவுகள்

கைப்பேசிக்கான முதல் தமிழ் மின்நூல் வெளியீட்டு விழா!

உங்களோட செல்பேசியை இரண்டுல ஒண்ணு பாத்துடுவோமா?

பிரசவத்தில் கணவனின் பங்கு