கோபத்தின் விளிம்பில்
சமீபத்தில் தொடர்பில் இல்லாத நண்பர் ஒருவர், LinkedIn வழி தொடர்பு கொண்டார்.
தான் ஒரு சாலைப் பிரிவில் (crossroads) இருப்பதாகவும் என்னுடன் உரையாடுவது பலன் தரும் என்றும் முக்கால் மணி நேரம் நேரம் ஒருக்கித்தரும்படியும் கேட்டுக்கொண்டார்
நான் அவரால் பரிந்துரைக்கப்பட்ட நாள், நேரத்தில் பேச ஒப்புக்கொண்டேன்.
அவரின் நேரத்தை அதிகம் வீணடிக்காதிருக்க அவர் பற்றிய தற்போதய தகவல்களை இணையத்தில் பார்த்துக்கொண்டு தயாரானேன்.
அவசர வேலைகள் முளைத்திருந்தாலும் ஒதுக்கி வைத்துவிட்டு குறிப்பிட்ட நேரத்தில் இணைய வழி உரையாடல் தொடங்கியது!
அன்னார் நடந்துகொண்டே பேசுவது காணெளியில் தெரிந்தது. அலுவலகப் பணியிலிருந்து விடுபட்டிருப்பது குறித்தும், சுய தொழில், மற்றும் வேலை வாய்ப்பு சாத்தியங்களைப் பற்றியும் சொல்லி என்னுடன் பணி புரிய உள்ள வாய்ப்புகளை பற்றி வினவினார்.
சுமார் பத்து நிமிடங்கள் பேசியிருப்பார். அவருடைய துறை பற்றியும் சாத்தியங்களைப்பற்றியும் சிந்தித்து என்னால் அவருக்கு வழங்க முடிந்த ஆகச் சிறந்த ஆலோசனைகளையும் மனதில் தொகுத்துக் கொண்டு செறுமலானேன்.
நான் பேச ஆரம்பித்த பிறகு உடனடியாக நிறுத்த வேண்டிய அவசியம் வந்தது, ஏனென்றால் அவர் நடந்து முடித்து வர வேண்டிய இடத்திற்கு வந்திருந்தார் அங்கே அவருக்கு வேறு ஏதோ அவசர அலுவல், அதனால் "ஒரு ஐந்து நிமிடம் கொடுக்க முடியுமா?", என்று என்னை கேட்டார். சரி என்று காத்திருந்தேன். ஆனால் ஒரு பத்து பதினைந்து நிமிடம் கழித்து தனக்கு ஏதோ வேலை அது இப்போதைக்கு முடியாதது போல தோன்றுகிறது! எனவே பிரிதொரு நாள் நாம் பேசிக் கொள்ளலாமா? என்று கேட்டார்.
சரி எல்லாருக்கும் சில நேரங்களில் நடப்பது தானே என்று நானும் சம்மதித்தேன். அவர் அடுத்த நாள் அதே நேரத்திற்கு எனக்கு ஒரு சந்திப்பு அழைப்பு (calendar invite) அனுப்பி இருந்தார் ஆனால் அந்த நேரம் எனக்கு உகந்ததாக இல்லை, அந்த நாளின் அதீத வேலைப்பளு, அவருக்காக பேசத்தொடங்கிய உடனே நிறுத்தப்பட்ட கசப்பு ஆகிய காரணங்களால் அவருடைய அழைப்புக்கு சரி என்றோ இல்லை என்றோ சொல்லாமலேயே விட்டிருந்தேன். அவர் குறிப்பிட்டிருந்த நேரமும் கடந்து விட்டது.
பிறகு அப்படியே விட்டால் நன்றாக இருக்காது என்று நினைத்து அவருக்கு LinkedIn வழியாக, அழைப்பை ஏற்க இயலாது போன தகவலையும் தெரிவித்தேன்.
மரியாதை நிமித்தம் அனுப்பப்பட்ட அந்தத் தகவலுக்கு பதில் இல்லை, அதன் பின் ஓரிரு வாரங்கள் ஓடின!
எனக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது, பேச அழைத்தது அவர்தான்! அவர் விரும்பிய நேரத்திற்கே நான் பேச சம்மதித்து, நேரம் ஒதுக்கி, பேச இருந்த நேரத்தில் அந்த அழைப்பை அவர் துண்டித்து விட்டார். பிறகு அவராக நேரம் ஒதுக்கி வந்து பேசியிருக்க வேண்டும் அல்லவா! ஆனால் அப்படி ஒன்று நடக்கவே இல்லை.
சந்தேகத்தின் பலனை அவருக்கு அளிக்க “புரிந்தது” என்ற ஒற்றைச்சொல்லை அனுப்பி வைத்தேன்! மீளாத வேலை பளுவோ, அல்லது மறதியோ,
“என்ன?”, என்று கேட்க வந்தால் கூட அந்தத் தொடர்பை புதுப்பிக்கும் சாத்தியம் இருக்கிறது!
இன்னும் இரண்டு வாரங்கள் கடந்தது!
என்னால் பொறுக்க இயலாமல் “ஒருவரை அவமானப்படுத்தும் சாத்தியக்கூற்றை உணர்ந்தீர்களா!” என்று தகவல் அனுப்பினேன்!
“வணக்கம் அருள், என்ன நடந்தது?”, என்று பதில் வந்தது
அப்போது மனதில் தோன்றியதை எல்லாம் எழுதிவிடாமல் கவனமாகத் தவிர்தேன். கொட்டிவிட்டால் அள்ள முடியாது!
“ஏன் பேசுவதை நிறுத்திவிட்டீர்கள்?” என்றேன்.
“நான் உங்களிடம் பின்னர் தொடர்பு கொள்கிறேன் என்று சொன்னேன் என்று நினைக்கிறேன்!” என்றார்.
“சரி! அதை அப்படியே விட்டுவிடலாம்”, என்று முடித்துக் கொண்டேன்.
இதற்கு மேல் அவரிடம் விளக்குவதோ, பேசுவதோ வீண் என்று தோன்றிவிட்டது!
அவரைப் பொருத்தவரை நான் தான் பேசவேண்டும் என்றேன் பிறகு நானே வேண்டாம் என்று விட்டுவிட்டேன், இதில் என்ன தவறு என்று தோன்றியிருக்கலாம்!
மண உறவுகளில் கூட அடிப்படை சிக்கல் இதுதான்! எப்பொழுது இன்னொருவரை உள்ளே கொண்டு வந்துவிட்டீர்களோ! அப்போதே அந்த விஷயம் உங்களைப்பற்றியானது மட்டுமல்ல! அடுத்த நபரின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து நடத்த நீங்கள் கடமைப்பட்டவர். அவரின் காலணிகளில் நின்று சிந்தித்தால் சில விஷயங்களை எளிதாக புரிந்து கொள்ளலாம்!
தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதும் வலுப்படுத்திக் கொள்வதும் எளிதன்று!
உனக்கென்ன சிக்கல், கடந்து போ! என்று சொல்லிவிடலாம், இந்தத் தருணங்கள் எனக்கு முக்கியமானவவை. எனக்கு அவர் யார், அவருக்கு நான் யார் என்று உணர்த்தும் நொடிகள் இவை! நம்முடைய கூட்டல் கழித்தல் கணக்குக்கான நேரம் இது!
மிகச்சுலபமாக அவர் தவிர்த்திருக்கக் கூடிய பிரச்சனை இது! இரண்டு நிமிட தொலைபேசி உரையாடல் கூட நேர் செய்திருக்கும்!
கோபத்தை உள்ளிடுவது தவறு! சேமித்து வைக்கப்பட்ட கோபமே வன்மத்தின் ஊற்று!
கோபம் சிறந்த எரிசக்தி, அதை ஆக்கப் பூர்வமாய் பயன்படுத்தவே எழுதுகிறேன்.
நன்றி!
கருத்துகள்