சிங்கையிருந்து சென்னைக்கு-3

ஒரு பயண அனுபவம் (தொடர்கிறது)
முக்கிய அறிவிப்புகள் கணீரென ஒலிக்கவேண்டாமா? தேய்ந்துபோன கிராமஃபோன் தட்டின் முனகல் போல ஒலித்த விமான ஓட்டியின் குரல், "விமானத்தில் *ஹைடிராலிக் சிஸ்டம்* பழுதுபட்டிருப்பதால் நாம் மீண்டும் பேங்காக்குக்கு திரும்புகின்றோம்", என்றது.

விமான சிப்பந்திகள் இங்குமங்குமாக நடக்கத்துவங்கினர். விமானத்தில் லேசான பதட்டம் நிலவியது

பிரச்சனையின் முழு ஆழம் தெரியாத போதும் நடுக்கடலில் விழவேண்டியதிருக்குமோ என்கிற கவலை எல்லாம் எனக்கு ஏனோ வரவில்லை. என் கவலை வேறு, ஒருமணி நேரத்துக்குமேலே பயணம் செய்தபின் மீண்டும் பாங்காக் திரும்புகிறோம் எனவே பாங்காக் செல்லவே ஒரு மணி நேரமாகும் பிறகு மீண்டும் கிளம்பி சென்னை வரவேண்டும். குறைந்தது மூன்று மணிநேர தாமதம். அங்கே சென்னையில் என்னை வரவேற்க இம்முறை அலுவல் காரணமாக தந்தை வரப்போவதில்லை, எனது தாயோ அல்லது என் மாமியாரோ வரக்கூடும். அவர்கள் வெறுமே காத்துக்கொண்டிருப்பார்கள், விசாரித்து அறியமாட்டார்கள். இதனால் அவர்களுக்கும் நிறைமாத கர்பிணியான என் மனைவிக்கும் ஏற்படக்கூடிய அநாவசிய பதட்டம் குறித்துத்தான் நான் கவலைப்பட்டேன்.

பின்சீட்டில் அமர்ந்திருந்தவர் தாண்டிச்சென்ற விமான பணிப்பெண்ணை என்ன சிக்கல் என்று வினவினார். புதிதாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. அப்பெண் ஹைட்ராலிக் சிஸ்டம் பற்றி தனக்கேதும் தெரியாது என்று நழுவிவிட்டார்

என் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்மணி ஏற்கனவே செய்திருந்த புன்னகையை அனுமதியாக கொண்டு அவரிடம் மெல்ல புலம்ப ஆரம்பித்தேன், "எவ்ளோ நேரம் ஆகுமோ தெரியலை, அங்க எல்லாரும் காத்துகிட்டிருப்பாங்க" அவர் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.

வெறும் புன்னகையே பதிலாக நான் தொடர்ந்தேன், "உங்களை யாரு ரிசீவ் பண்ண வர்ராங்க?"

"என் தம்பிதான் காரேடுத்து வாரேன்னு சொல்லிச்சு", பதிலுக்கு அவர்

"அய்யோ பாவம், எவ்வளவு நேரம் காக்கவைக்கப்போராங்களோ தெரியலை, எங்க வீட்டுல என்னமோ எதோன்னு அநாவசியமா பதட்டப்படுவாங்க", என்றேன் நான்.

"இதுல பதட்டப்பட என்ன இருக்கு?", என்று ஆச்சரியப்பட்டது அவரின் பார்வை

எனக்கு புரிந்துவிட்டது "விவரம் தெரியாதா? நாம இப்ப சென்னைக்குப்போகல பாங்காக்கு திரும்பிக்கிட்டிருக்கோம், விமானத்தில கோளாராம்", என்றேன்.

"அய்யோ! அப்படியா" என்று ஆச்சரியத்தோடு கேட்டுக்கொண்டார். அவர் முகத்திலும் லேசான பதட்டம், சற்று ஆசுவாசப்பட்டது என் மனது.

விமானம் பாங்காக்கை நெருங்கிக்கொண்டிருந்தது.

தொடந்த பேச்சின் மூலம் அவர் விடுமுறைக்கு சென்னை செல்லும் ஹாங்காங் வாசி என்று தெரிந்தது.

எப்படியாவது இத்தாமதத்தை வீட்டுக்கு உணர்த்திவிட்டால் நிம்மதி. என்னுடைய கைப்பேசியில் பன்னாட்டு சேவையை ரத்து செய்ததற்கு நொந்துகொண்டேன்.

என்ன செய்வது என்று யோசித்தபடி இருந்தபோதே விமானம் தரையிரங்கியது

விமானம் நின்றபின்னும் கீழே இறங்க அனுமதிக்கப்படவில்லை. முக்கிய அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் இருந்தனர்.

அனைவர் முகத்திலும் உயிருக்கு ஆபத்து எனும் பதட்டம் நீங்கி சற்று நிம்மதி தெரிந்தது

பின்சீட்காரர் சாமர்த்தியசாலி, எதிர் சீட்டிலிருந்த சிங்கிடம் கைப்பேசி இரவல் பெற்று தன் குடும்பத்துக்கு தாமதத்தை அறிவித்தார். அதன்பின் தான் சிங்குக்கே ஒரு உணர்வு வந்து தன் குடும்பத்தை அழைத்தார்.

நாமும் இரவல் வாங்கி பேசிவிடலாமா? என்று சிந்தித்து சற்றுத்தயக்கத்துடனே சொன்ன excuse me அவருக்கு கேட்டவில்லையா, அந்த அழைப்பு தனக்காக இருக்காது என்று விட்டுவிட்டாரா? இல்லை, விட்டால் அவனவன் இரவல் கேட்க ஆரம்பித்துவிடுவான் என்று வாளாவிருந்தாரோ தெரியாது. அடுத்தமுறை கேட்க என் சுய கௌரவம் இடம்தரவில்லை

சிங்குக்கு கேட்கவில்லையே தவிர பின்சீட்டுக்காரருக்கு நன்றாக கேட்டது, அதன் காரணமாக அவர் என்னிடம் பேசத்துவங்கியவர், அவர் பெயர் பிரகாஷ், ஆந்திராவைச்சேர்ந்தவர், பல நாடுகளுக்கு சுற்றவேண்டிய அலுவல் போன்ற தகவல்களில் ஆரம்பித்து இண்டியன் ஏர்லைன்ஸ், தாய் ஏர்லைன்ஸ் இவையெல்லாம் பழைய விமானங்களை பயன்படுத்துகின்றன,அதனால் தான் இத்தகைய கோளாறுகள் நேர்கின்றன. இந்தக்காரணத்துக்காகவே இவ்விமானங்களில் பயணிப்பதில்லை என்று தொடர்ந்தார்

என்னுடைய தலை தானியங்கி முறையில், அனிச்சை செயலாக, அவரின் பேச்சுக்கேற்ப ஆடிக்கொண்டிருந்தது. சிந்தனை முழுக்க எப்படி தகவல் சொல்வது என்பதிலேயே இருந்தது. கிட்டத்தட்ட இதே பதட்டம் பக்கத்து சீட்டு முஸ்லீம் பெண்மணிக்கும் இருந்தது. தாய் விமானச்சேவையில் ஏற்பட்ட இச்சிக்கலை தீர்க்க உதவவேண்டியது அவர்களுடைய கடமை அல்லவா? அவர்களையே தொலைபேச ஒருவழி செய்யச்சொல்வோம் என்று நினைத்திருந்தேன், ஒரு வழியாக இதே விமானத்தை சரி செய்து பறப்பதா? இல்லை வேறு விமானத்துக்கு பயணிகளை மாற்றி தொடர்வதா என்பதை தீர்மானித்துவிட்டார்கள், வேறு விமானம் தான். உணவிலிருந்து பயணிகளின் உடமை உள்பட அனைத்தும் மாற்றப்படவேண்டும். அதுவரை விமான நிலையத்தில் காத்திருப்பது என்று முடிவாயிற்று. விமானத்திலிருந்து படிப்படியாக பயணிகள் பேருந்து முலமாக விமான நிலையத்துக்கு கடத்தப்பட்டார்கள்.

அடுத்த விமானம் ஏற ஒன்றறை மணிநேரம் ஆனது, அந்த இடைப்பட்ட நேரத்தில் தான் தேங்கிக்கிடக்கும் மனிதநேயத்தை மீண்டும் உணர்த்தும் ஒரு சம்பவம் நடந்தது

அது...

(தொடரும்)

கருத்துகள்

அதிகம் பார்க்கப்பட்ட பதிவுகள்

கைப்பேசிக்கான முதல் தமிழ் மின்நூல் வெளியீட்டு விழா!

உங்களோட செல்பேசியை இரண்டுல ஒண்ணு பாத்துடுவோமா?

பிரசவத்தில் கணவனின் பங்கு