பிரசவத்தில் கணவனின் பங்கு

மனைவியின் பிரசவத்தில் கணவன் உடனிருப்பது அவர்களின் உறவுப்பிணைப்புக்கு மேலும் வலுச்சேர்க்கும் என்று நான் நினைக்கிறேன்.

ஒரு உண்மைக்கதை:

சிங்கையிலே வெளிநாட்டவர்களுக்கு பிரசவ செலவு மிக அதிகம்.
(அதிகமில்லை ஜெண்டில்மன் உன் சொத்துமொத்தமும் எழுதிவைத்துவிடு அது போதும்!)
இதனால் ஏழாம் மாதமே மனைவியை தாயகத்துக்கு அனுப்பவேண்டிய கட்டாயம் அவனுக்கு ஏற்பட்டது, ஏனென்றால் விமானத்தில் அதன்பின் அனுமதிக்கமாட்டார்கள்.

ஓர் ஒற்றை அறை குடியிருப்பில்...

"என்னங்க, உங்களை விட்டுபோக மனசே இல்லீங்க. கட்டாயம் பிரசவநேரத்தில நீங்க கூட இருக்கணும், இங்க வேலை அதனால வரமுடியலைன்னு சாக்குபோக்கு சொல்லக்கூடாது!"

"எனக்கு பழசெல்லாம் ஞாபகம் வருது, ஹும்! மறுபடி அமைதி, தனிமை, விரக்தி. ஆனா குழந்தைபிறந்த பிறகு உன் முகத்தில் வரப்போகிற மகிழ்ச்சியை பாக்கிறதுக்காக இதெயெல்லாம் பொறுத்துக்கத்தான் வேணும். எல்லாத்துக்கும் கம்யூட்டர்ன்னா சமயத்தில எனக்கே வெறுப்பாத்தான் இருக்கு, இனி உன்னையும் கொஞ்சகாலம் அதுவழியாத்தான் பாக்கணும். கவலைப்படாதே பிரசவ சமயம் கட்டாயம் நான் கூட இருப்பேன். டாக்டரை பாத்து எப்ப பிரசவமாகும்னு கேட்டு சொல்லு அதுக்கு 15 நாள் முன்னாடியே வரேன். சேச்சே! அழக்கூடாது"

"கொஞ்சம் பயமா இருக்குங்க, நீங்க கூட இருந்தா தைரியமா இருக்கும்"

"பயப்படாதே, எல்லாம் நல்லபடி நடக்கும். உன்னை பாத்துக்க என் ஒருத்தனைத்தவிர எல்லாருமே உன் கூடவே இருப்பாங்க, நானும் சரியான நேரத்தில வந்துடுவேன், அப்புறம் என்ன கவலை?"

ஓர் அதிகாலை, சாங்கி விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில்...

"அது உங்க அம்மாங்களா? நீங்களும் இண்டியன் ஏர்லைன்ஸ் தானே"

"ஆமாங்க இங்க மூணுமாசம் வந்திருந்தாங்க, எங்க குழந்தைய கூட்டிகிட்டு அவங்க ஊர் திரும்புறாங்க"

"அப்டீங்களா, இது என்னோட மனைவி, பிரசவத்துக்காக ஊருக்கு அனுப்புறேன். அவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் தொணையா இருக்கட்டும்"

"ஓ! அதுக்கென்ன, அம்மாவுக்கு எழுத படிக்க தெரியாது, கைக்கொழந்தையும் வைச்சிருக்கறதால ஏர்போர்ட் ஆளுங்களே உள்ள கொண்டு பிளைட் ஏத்தீடுவாங்க, அவங்க கூடவே இவங்களையும் அனுப்பீடுங்க"

சிறிது நேரத்தில் சிப்பந்தி வந்து அழைக்க, மனமே இல்லாமல் அவனும் அவளும் பிரிகிறார்கள்,

"உள்ள வைட்டிங் ரூமுக்கு போனதுமே எனக்கு போன் பண்ணு. விமானம் கிளம்பறவரை இங்கதான் இருப்பேன், கவலைப்படாதே எல்லாம் நல்லபடி நடக்கும்"

பிறகு பிரசவதேதி நெருங்கிய ஒரு நாள் மாலை சென்னையில் ...

"டாக்டர், பிரசவத்தின்போது நானும் கூட இருந்தா என் மனைவிக்கு ரொம்ப தெம்பா இருக்கும். அதுக்கு உங்க பர்மீஷன் வேணும்"

"பர்மீஷன் தர்றதைப்பத்தி எனக்கு ஒண்ணுமில்லை, நார்மல் பிரசவம்னா நீங்களும் இருக்கலாம், ஆனா சிசேரியன்னா அனுமதிக்க முடியாது. இப்ப இருக்கிற நிலையிலே அனேகமா இது சிசேரியனாதான் இருக்கும். இயற்கையான பிரசவம்தான் வேணும்னா அதை சிடிமுலேட் பண்ண இஞ்செக்ஷன் குடுக்கலாம்"

"அதெல்லாம் வேணாம் டாக்டர், அதுல வலி அதிகமிருக்கும்னு கேள்விப்பட்டேன். சிசேரியன்னா அனெஸ்தீசியா எப்படி டாக்டர்"

"லோக்கல் அனெஸ்தீசியா தான் முதல்ல கொடுப்போம். பேஷண்டுக்கு வலி தெரியாது. குழந்தை பிறந்ததும் அவங்களாலயும் பாக்க முடியும். ரொம்ப பயந்தாதான் மயக்கம் கொடுப்போம். உங்களுக்கு ஒரு உதவி வேணும்னா பண்ணலாம், கேமிரா குடுத்தா ஆப்பரேஷன் பண்ணும்போது படம் எடுத்து தரச்சொல்றேன்"

பிறகு சிசேரியன் என்று முடிவான பின் ஒரு சுபயோக சுபதினம் குறிக்கப்பட்டது அதற்கு
முதல் நாள் இரவு ஆஸ்பத்திரி அறையில் ...

"ஒண்ணும் பயப்படாதே! சிசேரியன்னா இன்னும் சுலபம், உனக்கு சிரமம் அதிகம் இருக்காது. உன்னுடைய வலியை நீ உணர்ற நேரத்துல அதை ஈடுகட்ட நம்ம பையன் பக்கத்துல இருப்பான்"

"நீங்கதான் பிரசவ சமயத்தில பக்கத்துல இருக்கமாட்டீங்க"

"நானென்ன செய்றது ஆப்ரேஷன்கிறதால டாக்டர் உள்ள விடமாட்டாங்க, நான் அந்த ரூமுக்கு வெளியவேதான் இருப்பேன். உனக்கும் மயக்க மருந்து குடுத்திருவாங்க. யப்பா! இங்க கொசுக்கடிதாங்க முடியலை"

மறுநாள் காலை ...

மனைவியை அவர்கள் தள்ளிக்கொண்டு (அட! ஸ்டெச்சரில்தான்) தியேட்டருக்குள் போவதை பார்த்தபடி நிற்கிறான் அவன். பிறகு குறுக்கும் நெடுக்குமாக நடக்கும்போது அது சற்று சினிமாத்தனமாக இருப்பதாக தனக்குள் நினைத்துக்கொள்கிறான். ஏனோ அவனிடம் பதட்டமே இல்லை. தாயும் சேயும் நலமாக இருக்க இறைவனிடம் நேரடியாக பேசுவது போல மனதுக்குள் வேண்டிக்கொள்கிறான். ஒரு உயிர் போய்த்தான் ஆகவேண்டுமெனில் அது மகனாகவே இருக்கட்டும் மனைவி மிஞ்சட்டும் என்று இறைஞ்சுகிறான்.

நர்சுகள் மாறிமாறி உள்ளே போவதும் வருவதுமாக இருந்தார்கள். வெளியே அனைவரும் குழந்தையின் அழுகுரல் கேட்க ஆவலாய் காதுகளை தீட்டிவைத்து காத்திருந்தனர்.

வெளியே ஓட்டமும் நடையுமாய் வந்த நர்ஸ் "ஆப்ரேஷன் முடிஞ்சது. பின்பக்கம் முழுதாய் திறக்கிறமாதிரி நைட்டி ஒண்ணு குடுங்க", என்றார்.

"அப்படி ஏதும் இல்லீங்களே, முன்னமே சொல்லியிருந்தீங்கன்னா வாங்கி வைச்சிருப்போம். இப்ப என்ன பண்ணுறது? இருக்குற நைட்டியில பின்னாடி கிழிச்சிடலாமா?"

"சரி அப்டியே செய்ங்க"

பின்னர் உள்ளே போய் மீண்டும் திரும்ப வருகிறார். "இது ஈரமா இருக்கு புதுசா வாங்க சொன்னாங்க டாக்டர்"

இந்த நேரத்தில் வெளியே போகப்பிடிக்கவில்லை அவனுக்கு ஆனாலும் வேறு வழியில்லை. அப்பாவை அழைத்துக்கொண்டு கடைதேடி ஓடுகிறான் அவன்.

கண்ணில் பட்ட கடையில் கேட்ட விலையைக்கொடுத்து வாங்கிக்கொண்டு வரும் முன் குழந்தையை அறைக்கு கொண்டு வந்திருந்தார்கள். அவனுடைய மாமா பெரியவர் என்னும் முறையில் குழந்தையை கையில் வாங்கியிருந்தார். அனைவரும் மகிழ்சியாக இருந்தனர். அவனுடைய அப்பா தயாராக வைத்திருந்த இனிப்பை எல்லோருக்கும் வழங்கினார். அவன் ஒருமுறை பார்த்தான் குழந்தை செக்கச்செவேலென்று இருந்தான். சூடு வேண்டுமென்று விளக்கு வைத்திருந்தார்கள்.

அவன் கண்கள் அவளைத்தேடின. அவளை தள்ளிக்கொண்டு வந்தார்கள், ஸ்ரெச்சர் கூடவே அவளின் தாயும் நடந்தார். அவள் கண்ணில் இருந்து கண்ணீர் கோடாக இருபக்கமும் இறங்கியிருந்தது. வாய், வலிக்குதும்மா என்று முணுமுணுத்தபடி இருந்தது, உதடுகள் வறண்டிருந்தன. அவனுக்கு வேதனையாக இருந்தது,மனதுக்குள் இவள் என் குழந்தை என்றும் இவளை நான் தான் வளர்கிறேன் என்றும் எண்ணுகிறேனே, இவள் எவ்வளவு வலி எனக்காக தாங்கிக்கொண்டிருக்கிறாள் என்று வியந்தான். அவள் கையை ஆறுதலாக பற்றிகொண்டான். அவர்களின் கண்கள் சந்தித்தபோது உதடுகள் சொல்லாத எத்தனையோ சேதிகள் பரிமாறப்பட்டன. வலி குறைய தான் ஏதும் செய்யமுடியுமா என்று யோசித்து டாக்டரிடம் விரைந்தான்.

டாக்டர் கேமிராவை கையில் திணித்தார். "குழந்தையை படம் எடுக்கல, ஆப்பரேஷன் பண்றத மட்டும் சில ஸ்னேப்ஸ் எடுத்திருக்கேன். கவலைப்படாதீங்க, வலி குறைய தேவைப்பட்டா (மட்டும்) மருந்து தருவோம்", என்றார்

அவன் யாரும் இல்லாத மூலைக்கு ஓடினான் அந்த படங்களைப்பார்க்க. அதைப்பார்ப்பது அவ்வளவு சுலபமானதாக இல்லை.

முதல் படத்தில் அவள் மருத்துவர்களிடம் ஸ்னேகமாக சிரித்துக்கொண்டிருந்தாள். பச்சை நிறத்துணியால் அவளை மூடியிருந்தார்கள் வயிற்றில் வெட்டப்படவேண்டிய இடம் மட்டும் திறந்திருந்தது. முதுகுத்தண்டில் மரத்துப்போக ஊசி போட்டிருப்பார்கள்

அவளால் தன் வயிறு கிழிக்கப்படுவதை பார்க்க முடிந்திருக்கிறது, பார்த்து பயந்துவிட்டாள். பிறகு அவளுக்கு மயக்கமருந்து கொடுத்துவிட்டார்கள் (இதெல்லாம் டாக்டர் சொல்லி அவன் தெரிந்துகொண்டான்)

இரண்டாம் படத்திலேயே வயிறு வெட்டுப்பட்டிருந்தது. உட்புறம் குழிவாகத்திறந்திருந்தது. பச்சைத்துணியின்மேல் சில இடங்களில் ரத்தம் தேங்கியிருந்தது. சதைத்துணுக்குகள் ஆங்காங்கே ஒட்டிக்கொண்டிருந்தன.

அதற்குமேல் அவனால் அப்போது பார்க்க முடியவில்லை. அவள் மேல் கோபம் கொள்ளும் நாளில் அதைக்கட்டாயம் பார்க்கவேண்டும் என்று பத்திரப்படுத்தினான். இப்போதும் அந்த படங்களை அவன் சில சமயங்களில் பார்க்கிறான், அந்த நேரங்களில் உள்ளுக்குள் பீறிடுகிறதே அதுதான் அன்பா என்று சிந்தித்தபடி...

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை!

//அதற்குமேல் அவனால் அப்போது பார்க்க முடியவில்லை. அவள் மேல் கோபம் கொள்ளும் நாளில் அதைக்கட்டாயம் பார்க்கவேண்டும் என்று பத்திரப்படுத்தினான். இப்போதும் அந்த படங்களை அவன் சில சமயங்களில் பார்க்கிறான், அந்த நேரங்களில் உள்ளுக்குள் பீறிடுகிறதே அதுதான் அன்பா என்று சிந்தித்தபடி...
//

வார்த்தைகள் வரவில்லை...
இது போதும்! வேறு என்ன வேண்டும்??

--
நிர்வியா
Arul இவ்வாறு கூறியுள்ளார்…
அன்பின் நிர்வியா,
என் எழுத்துக்களால், அவனின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி ஓர் உள்ளம் தொடமுடிந்ததற்கு மிக மகிழ்கிறேன். உங்கள் வார்த்தைகள் மேலும் எழுத ஊக்கம் தருகின்றன

அன்புடன்
இர.அருள் குமரன்
கரிகாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் கதையின் கடைசி வரிகள் படிக்கையில் எனது கண்களில்
இருந்து கண்ணீர் துளிகள்.படங்கள் தேவையில்லை, உங்கள்
இந்த உண்மைக் கதையே போதும் மனைவி மேல் கோபம்
கொள்ளும் பல கணவன்மார் திருந்துவதற்கு.தொடர்ந்து எழுதுங்கள்.
நன்றி
சாகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
"அவள் மேல் கோபம் கொள்ளும் நாளில் அதைக்கட்டாயம் பார்க்கவேண்டும் என்று பத்திரப்படுத்தினான். இப்போதும் அந்த படங்களை அவன் சில சமயங்களில் பார்க்கிறான், அந்த நேரங்களில் உள்ளுக்குள் பீறிடுகிறதே அதுதான் அன்பா என்று சிந்தித்தபடி..."என்ன பதில் எழுதுவது இந்த பதிவிற்கு...
எழுதாமல் செல்லவும் மனம் வரவில்லை....
அருள், நன்றி.
அன்பு இவ்வாறு கூறியுள்ளார்…
அன்புக்குரிய அருள்,

அருமையான எழுத்து.

சிலரிடம் விஷயமிருக்கும் - எழுதவராது,
பலர் எழுதுகிறோம் - வலையிருப்பதால்!
உங்கள் எழுத்தில் இரண்டுமிருக்கிறது,
தொடர்ந்து எழுதுங்கள்.
உங்கள் எழுத்து இந்த வலைப்பதிவு
என்ற எல்லைக்குள் அடங்கிவிடாமல்
பொதுசன பத்திரிக்கைகளிலும் வரவேண்டும்.

வாழ்த்துக்கள்

என்றென்றும் அன்புடன்,
அன்பு, சிங்கை.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
hello arul,
you can express yourself very well. but are you really going to do that when you get angry with your wife? dont have to be too idealistic. but defiitely husband must be there near wife during her delivery time. it is rather a wonderful feeling to see your little one and also any wife would feel secured with her husband's presence there.
chitra
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
அருள்,

அருமையான பதிவு; நல்ல எழுத்து!

வாழ்த்துக்கள்,
கண்ணன்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Nichayamaaga ungaL thunaivi migavum koduthu vaiththavar :). ella husbands-m ippadi irunthu vittaal piragu veettil thunbamE varaathu :).
wrds
ka
ILA (a) இளா இவ்வாறு கூறியுள்ளார்…
அருள், என்ன ஒரு ஒற்றுமை? அலை வரிசை ஒத்துபோவது என்பது அதிசயமே, நமக்கு எப்படி?
Gurusamy Thangavel இவ்வாறு கூறியுள்ளார்…
நண்பர் இளாவின் பதிவின் மூலம் உங்கள் இடுகையைப் படித்தேன். மிக அருமையாக எழுதியுள்ளீர்கள். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நானும் உங்கள் அனுபவத்தை நேரடியாக உணர்ந்தேன். அதுபற்றிய எனது பதிவு http://puliamaram.blogspot.com/2006/11/blog-post_16.html

அதிகம் பார்க்கப்பட்ட பதிவுகள்

கைப்பேசிக்கான முதல் தமிழ் மின்நூல் வெளியீட்டு விழா!

உங்களோட செல்பேசியை இரண்டுல ஒண்ணு பாத்துடுவோமா?