உஷார்

பயந்தபடியே நடந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். இப்படி நடக்கலாம் என்று முன்னமே யூகித்ததுதான்.

நடந்தது என்ன? - நேரடி ரிபோர்ட்
தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ரகசிய சந்திப்பில் காரசாரமான வாக்குவாதம்.
விஷயம் இதுதான், படாதபாடுபட்டு சாட்டிலைட் சானல்களில் ஸ்லாட் வாங்கி கைக்காசு போட்டு நாம் தொடர்
எடுத்தால் கதாசிரியர்கள்/டைரக்டர்கள் நம்மிடமே பிலிம் காட்டுகிறார்கள் என்று தயாரிப்பாளர்கள் குமுறல்.
பனிப்போரைவிட்டு பானிப்பட் போருக்கே ஆயுத்தமாக திடீர் முடிவு.

தயாரிப்பாளர் கூட்டத்துக்கு பதிலடி - டைரக்டர்களின் கிண்டல்
தொடர்களை இயக்குவது என்பது சிறுபிள்ளை விளையாட்டல்ல. பஞ்சத்தில் அடிபட்டவர்கள் மட்டுமே இங்கே தயாரிப்பாளர்களாக உலவுகிறார்கள். அவர்களின் குறைந்த பட்ச பட்செட்டில் நாலே நாலு நடிகைகளையும் அரை லிட்டர் கிளிசரினையும் வைத்து தமிழ் நாட்டையே அழவைத்து மெகா சீரியலை சக்ஸஸ் பண்ணக்கூடிய எங்களையா அவர்கள் பகைத்துக்கொள்ள துணிந்துவிட்டார்கள். இது விரல் சூப்பும் குழந்தை, தன் தாயிடமே கா விடுவதுபோல உள்ளது. நாங்கள் இல்லாவிட்டால் அவர்கள் இல்லவே இல்லை என்று டைரக்டர்கள் சங்க கூட்டத்தில் கிண்டல்.

தயாரிப்பாளர்கள் கொதிப்பு
எங்களை சீண்டுவது சிங்கத்துக்கு பெப்பர்மிண்ட் தருவது போல, தந்தவனுக்கு மினிமம் கையிருக்காது. உங்களை விட திறமையானவர்களை கொண்டுவந்து அமர்த்திக்காட்டுவோம் என்று பதிலுக்கு தயாரிப்பாளர்கள் சூளுரைத்தனர்.

ஏஜெண்ட் நியமனம் - ரகசிய கூட்ட தீர்மானம்
இதனைத்தொடர்ந்து நடந்த ரகசிய கூட்டத்தில் தொ(ல்)லைக்காட்சி சீரியல்களை இயக்கும் லாவகம் வாய்ந்த புதியவர்களை கண்டுபிடிக்கும் பணியை தயாரிப்பாளர் சங்கம் ஏஜெண்டுகளிடம் ஒப்படைத்தது. இதற்கு தெலுகு பட தயாரிப்பாளர் சங்கமும் ஆதரவு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ஏஜெண்டுகள் வலைவீச்சு
சந்து பொந்து இண்டு இடுக்கு விடாமல் ஏஜெண்டுகள் தேடுதல் வேட்டை நடத்தினர். பத்திரிக்கைகளில் விளம்பரம் தந்தால் டைரக்டர்கள் உஷாராகிவிடக்கூடும் எனவே தான் ரகசியமாக தேடுகிறோம், நீங்களும் இதை ரகசியமாக வைத்துக்கொள்ளுங்கள் என்று பத்திரிக்கையாளர்களுக்கு ஏஜெண்டுகள் வேண்டுகோள்.

ஆபத்தை உணரவில்லை
தமிழ் நாடே அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டிருக்கும் விபரம் அறியாமலே அப்பாவித்தனமாக தமிழ் உலகம் எனும் மடற்குழுவில் ஒரு தொடர்கதைப்போட்டியை நடத்த ஆரம்பித்தார்கள். போட்டி போட்டுக்கொண்டு ஆளாளுக்கு கதையை பல திசைகளில் இழுத்துச்சென்றனர். தாங்கள் கண்காணிக்கப்படுவதை கதையைக்குதறும் சுகானுபவத்தில் மூழ்கியிருந்ததால் பாவம் அவர்கள் உணரவில்லை.

ஏஜெண்ட் ரிபோர்ட்
அதிரகசியமாக சமர்பிக்கப்பட்ட அந்த ரிபோர்ட் எங்கள் நிருபரிடம் வசமாக மாட்டியது. அது உங்கள் பார்வைக்கு


ஏஜெண்ட் 099இன் அதிரடி ரிபோர்ட்

இங்கே தொ(ல்)லைக்காட்சி தொடர் எடுக்க திறம்படைத்த பலர் இருக்கிறார்கள், அவர்களில் திறமை அடிப்படையில் சிலரை வரிசைப்படுத்தியிருக்கிறோம்

ராமச்சந்திரன் உஷா: இவரிடம் மீட்டர் கணக்கில் பூ சுத்த தேவையான சரக்கிருக்கிறது. எசகு பிசகான சூழ்நிலையில் சீரியல் மாட்டிக்கொண்டால் எல்லாம் மாயை என்று சுலபமாக கதையை திசை திருப்பிவிடுவார்.

இர.அருள் குமரன்: குடும்பக்கதை வைத்து சீரியல் பண்ணும்போது அது ரேட்டிங்கில் டெட் பாடி போல படுத்துவிட்டால் இவர் சடாரென ஆளைக்கொன்று கிரைம் சீரியலாக மாற்றிவிடுவார். அடிக்கடி நடிகைகள் தகராறு செய்யும்போது இவரின் உழைப்பு நமக்கு வெகுவாக பயன்படும்.

ஜெயந்தி சங்கர்:
மாயாஜால சீரியல்களை இவரை வைத்து எடுக்கலாம், பெண்ணை பாம்பாக்குவது, பாம்பை பிசாசாக்குவது போன்ற வேலைகளை இவர் திறம்பட சமாளிப்பார்.

இன்னும் பலர் இருந்தாலும் அவர்கள் இலக்கிய தரத்தோடு எழுத முயற்சிப்பதால் சீரியலுக்கு பயன்படமாட்டார்கள் என்று உறுதியாக நம்பி இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். இப்போது மற்ற மடற்குழுக்களையும்
கண்காணிக்கத்தொடங்கியிருக்கிறேன்

பேசிய பாக்கித்தொகை முப்பதாயிரத்தை மன்னிக்கவும் (ஹும்...) மூன்றாயிரத்தை உடனே அனுப்பவும்

இவண்,
ஏஜெண்ட்99

அதிமுக்கிய பின்குறிப்பு: மேற்குறிப்பிட்ட அனைவரும் வெளிநாட்டில் இருப்பவர்கள், அவர்கள் சிக்குவது அரிது. இவர்களில் அருள்குமரன் இப்போது உள்நாட்டில் இருப்பதால் உடனே அமுக்கவும்
 
மயிரிழையில் தப்பியது
இச்சதித்திட்டத்தை சற்றும் அறியாத அ(ட)ப்பாவி அருள்குமரன் சிங்கை திரும்ப விமான நிலையம் செல்லும்போது ஜீப்பில் துரத்திய தயாரிப்பாளர்கள், அருள் குமரன் முப்பிறவியில் செய்த புண்ணியத்தாலோ இப்பிறவியில் செய்யாத பாவத்தாலோ பலத்த பணமுடையோடு காத்திருந்த டிராபிக் போலீஸை ராங்சைடில் கடக்க, அவர் கபக்கென்று அமுக்க, அப்பாடி! ஒருவழியாக தமிழகம் தப்பித்தது.

மீண்டும் கண்டம்
தமிழகத்தின் கேடுகாலம் முற்றாக அகலாத நிலையில் மீண்டும் சிக்கல். மரத்தடி கேவியார் என்பார் தன் பேரைப்போலே எல்லாரையும் கேவி அழவைப்பார் என்று எஜெண்டுகள் கொடுத்த தவறான தகவலின் அடிப்படையில் அவரைப்பிடிக்க சென்னையில் அவரின் நண்பர்களைப்போல வேடமிட்டு தாயாரிப்பாளர்கள் காத்திருந்தனர். அவருக்கு ஆசைகாட்ட கொசப்பேட்டை குப்சாமி வேஷத்தை அவருக்கே கொடுத்து பெரியகுடும்பத்தின் 4ஆவது பெண்ணைக்கட்டிக்கொண்டு 5ஆவது பெண்ணை கற்பழிக்கும் வேலையையும் அவருக்காகவே ஒதுக்கியிருந்தனர் அவரோ ஒரு வாரம் ஒரு நிமிஷமாய் போக்கிவிட்டு நண்பர்களுக்கு கொடுத்த அல்வாவை தயாரிப்பாளர்களும் கொடுத்து தன் பங்குக்கு புண்ணியம் கட்டிக்கொண்டார்.

ஆனாலும் அபாயம் நீங்கிவிடவில்லை
எம்கே குமார் எனும் மரத்தடிவாசி காபிடபரா சகிதமாக தமிழகத்தின் பல இடங்களில் உலவிவருகிறார். கே.வி.ராஜாவின் கண்ணில் பட்ட அவர், ஏஜெண்ட் மற்றும் தயாரிப்பாளர்கள் கண்ணில் படாமலிருக்க எல்லாம் வல்ல இறைவனை அனைவரும் ஒரு சேர பிரார்த்திப்போம். இருந்தாலும் விதிவலியது என்பதால் எதற்கும் தயாராக நம் மனதை திடப்படுத்திக்கொள்வோம். சோதனையிலும் ஒரு அதிஷ்டம் போல இன்னும் பெங்களூர் மரத்தடிவாசிகள் ஏஜெண்டுகளின் கண்ணில் படவில்லை, அது இன்னும் எத்தனை நாளைக்கோ?


பத்தாக்கொறைக்கு இத்தப்பாரு!
ஏற்கனவே இருப்பது போதாதென்று சிக்கல் மேலும் வலுத்துவருகிறது. நம் கெட்ட நேரம் எல்லாம் சேர்ந்துவருவதுபோல இந்த நேரம் பார்த்து பெயரில் சுந்தரமான மரத்தடிவாசி தன் குறும்பட ஆசையை எடுத்துவைத்து தயாரிப்பாளர்கள் வயிற்றில் பீர் வார்க்க, 'பத்தாக்கொறைக்கு இத்தப்பாரு', என்னும் கணக்கில் ராஜாவும் உஷாவும் கனவு காண ஆரம்பித்துள்ளனர். இந்தத்தகவல்கள் உடனுக்குடன் ஏஜெண்டுகளுக்கு கிடைத்து வருகிறது.


தகவல் கொடுப்பவர் யார்? - புலன்விசாரணை ரிப்போர்ட்
மடற்குழு விபரங்களை வெளியிடும் நபர் யார் என்று நம் நிருபர்களை விட்டு விசாரித்தபோது கிடைத்த அதிர்ச்சி தகவல். மரத்தடியிலும் இருந்துகொண்டு தொலைக்காட்சித்தொடர் தொடர்புகளையும் தொடர்ந்துவரும் மாலதிதான் அந்த நபர் என்று நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

'உஷா'ர்
இந்த சிக்கலான நூடில்ஸ் சூழ்நிலையில் உஷா நவக்கிரகம் சுற்ற தமிழகம் வரப்போகும் தகவல் தெரிந்து தயாரிப்பாளர்கள் ஒன்பது பேர் அவரை சுற்ற இப்போது ஒத்திகை பார்த்துவருகிறார்கள். "இவங்க எல்லாம் ஒண்ணுசேந்தாங்கன்னா, அப்புறம் தமிழகத்தை ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது" என்று பிரபல நடிகர் நம் நிருபரிடம் கவலை தெரிவித்தார்.

இனி என்ன நடக்குமோ யாருக்கு தெரியும்
விதிவிட்டவழி

அன்பான வம்புடன்,
இர.அருள் குமரன்

பின்குறிப்பு 1: மேலே எழுதியுள்ளவற்றால் நேரடியாகவோ(பெயர் குறிப்பிடப்பட்டவர்கள்),
மறைமுகமாகவோ(இதைப்படித்தவர்கள்) பாதிக்கப்பட்டவர்கள் இவற்றை ஹாஸ்ய உணர்வுடன், லேசாக எடுத்துக்கொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள்

பின்குறிப்பு 2: "துன்பம் வரும் வேளையிலே சிரிங்க" என்று சொல்லிவைச்சார் வள்ளுவரு, சரிங்க.





கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லா இருக்கு. குறிப்பா பிற்பகுதி ரொம்ப நல்ல ஹாஸ்யமா இருக்கு. முதல் கால்வாசி மட்டும் மொதல்ல புரியவே இல்லை. திரும்பவும் மறுமுறை படித்ததும் முழுசும் படிச்சேன். அப்பறம்தான் விஷயம் புரிஞ்சு இன்னும் சிரிச்சேன்

அடிக்கடி இப்படி ஏதாவது எழுதி சிரிப்பு வெடி கொளுத்திப் போடவும். வேறு சில வகையான பதிவுகளுக்கு மறுமொழி கொடுக்கமுடியாமல் செய்வதற்கு ஒரு ப்ராயச்சித்தமாக இருக்கட்டுமாக! :-))

க்ருபா
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
:D . Thamizh naattu serial-gaL thappiththana :).

wrds
ka

அதிகம் பார்க்கப்பட்ட பதிவுகள்

கைப்பேசிக்கான முதல் தமிழ் மின்நூல் வெளியீட்டு விழா!

உங்களோட செல்பேசியை இரண்டுல ஒண்ணு பாத்துடுவோமா?

பிரசவத்தில் கணவனின் பங்கு