சிங்கையிருந்து சென்னைக்கு-1

ஒரு பயண அனுபவம்
ஒரு மாதம் சிங்கையில் இருக்கமாட்டேன் என்பதால் முடிக்கவேண்டிய அலுவலகப்பணிகள் நெருக்கின. மறுநாள் காலை நான்கு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பவேண்டும் நள்ளிரவு 1 மணிக்குத்தான் வேலைகளை முடிக்க முடிந்தது. வழக்கமாக பெட்டியில் மடிப்பு கலையாமல் அடுக்கி வைத்துக்கொள்ளும் நான் களைப்புதாளாமல் குப்பைக்கூடையில் அள்ளிகொட்டுவதுபோல கொட்டி மூடி உறங்கச்சென்றேன்.

ஒரு வழியாக எழுந்து குளித்து கிளம்பி வாடகைக்காரில் அமர்ந்தாயிற்று, சிலுசிலு என வீசும் காலைத்தென்றலை அனுபவித்தபடி யோசனையில் மூழ்கினேன். காலை நேர விமானப்பயணம் எப்போதும் எனக்கு ஆர்வமூட்டும் விஷயம். பஞ்சுப்பொதிகளென தோன்றும் மேகங்களை நான் என் சிறுவயது கனவுகளில் கண்டதுண்டு, மெல்ல கதவிடுக்கு வழியே கசிந்து என் கட்டிலடியே அவை நுழையும். முதல் முறையே அவற்றை நனவில் கண்டபோது வியப்புத்தாளாமல் மனதுக்குள் கூவினேன். கனவில் கண்ட உருவம் போல அச்சு அசலாக அடர் புகையாக விமானத்தின் மேலும் கீழும் பக்கவாட்டிலும் பரவிப்படர்ந்திருந்தது. அன்று முதல் இன்று வரை மேகங்களையும் சூரியன் அவற்றினூடே விளைவிக்கும் வண்ண மாற்றங்களையும் ரசிக்கத்தவறுவதில்லை. வழக்கமாக நேரே சென்னை செல்லும் விமானத்தை தேர்ந்தெடுக்கும் நான் ஒரு மாறுதலுக்காக தாய் விமானத்தில் பயணிக்கப்போகிறேன். இங்கிருந்து பாங்காக் நகருக்கு சென்று அடுத்த விமானத்தில் சென்னை பயணம்.

இதோ சிங்கையிலிருந்து விமானம் கிளம்பிவிட்டது, விமானம் மேலே செல்லச்செல்ல குறுகிக்கொண்டிருத்த சிங்கையிடம் மானசீகமாக விடைபெற்றுக்கொண்டேன். தரைதெரியாத உயரம் அடையும்வரை ஜன்னலூடே வானத்தை ரசித்தபின் விமானத்தின் உட்புறம் நோக்கத்துவங்கினேன். விமான பணிப்பெண்களை உற்றுப்பார்த்து அவர்களின் முக அமைப்பை தாய்லாந்துவாசிகளின் பிம்பமாக மனதில் பதியவைக்க முயன்றேன், கிட்டத்தட்ட சீன முகம் ஆனால் மூக்கை வைத்து எளிதாக வேறுபடுத்திவிடலாம். முகம் பார்த்தே ஒருத்தி எந்த நாட்டை சேர்ந்தவள் என்று கண்டுபிடிப்பதில் சிறந்தவன் என் நண்பன், எனக்கு அவ்வளவு தெளிவில்லை. இப்படித்தான் ஒருமுறை அலுவலகப்பணி நிமித்தமாக சென்ற இடத்தில் ஜப்பானிய மோகம் கொண்டு தன்னை முழுக்க ஜப்பானிய முறையில் அலங்கரித்திருந்த சீன பெண்ணை சரியாக அடையாளம் கண்டுகொண்ட என் நண்பன் அவளிடமே அதுபற்றி கேட்க, ஆச்சரியப்பட்ட அவள் பிறகு நெருக்கமாகி Datingகிற்கு அழைக்க, அப்புறம் நடந்ததெல்லாம் தனிக்கதை!

இப்படிப்பட்ட பலன்களை நான் எதிர்பார்க்கவில்லை என்றாலும் தெரிந்துகொள்வது நல்லது என்று நினைத்ததால் ஆராய்ச்சியை தொடர்ந்தேன். பாங்காக்கில் இறங்கி ஒரு மணி நேரத்தில் அடுத்த விமானம் ஏறியபின்னும் ஆராய்ச்சி தொடர்ந்தது. இங்கே எங்கள் பகுதியை கவனித்துக்கொண்ட பெண்ணின் முகத்திலோடிய பச்சை நரம்புகள் பார்வைக்கு தெளிவாக தெரிந்தன, நீள் வட்டமான முகம், தாடை சற்று நீளம் அதிகம் என்றாலும் அழகாகவே தோற்றமளித்தாள்.

உணவு கொண்டுவந்த ஆணின் முகம் மிக கவர்வதாக இருந்தது, தாய்லாந்து அம்சங்கள் அவனிடம் காணப்படவில்லை அருகில் வரும்போதுதான் பெயரை கவனித்தேன், அட! இந்தியன். சற்று மகிழ்ச்சியாக இருந்தது. தாய்லாந்து மொழியை சகஜமாக பேசக்கூடியவன் என்பதால் அவனுக்கு அப்பணி கிடைத்ததாம் பின்னர் தெரிந்துகொண்டேன். முதல்நாள் இரவில் வேலையை தொடர்ந்தபடி இடையிடையே பார்த்த ஆங்கிலப்படத்தில் நடந்த விமானக்கடத்தல், விமான பணிப்பெண்ணின் ஒருத்தியின் விமான மீட்பு சாகசங்கள், ஏனோ நினைவுக்கு வந்தது. விட்டால் கட்டுக்கடங்காமல் சீறிப்பாயும் என்னுடைய கற்பனைக்குதிரையை தட்டிவிடாமல் கவனமாக கட்டிப்போட்டேன்.

ஆனால் நிஜமாகவே எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது

(தொடரும்)

கருத்துகள்

அதிகம் பார்க்கப்பட்ட பதிவுகள்

கைப்பேசிக்கான முதல் தமிழ் மின்நூல் வெளியீட்டு விழா!

உங்களோட செல்பேசியை இரண்டுல ஒண்ணு பாத்துடுவோமா?

பிரசவத்தில் கணவனின் பங்கு